உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான
கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம்
நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள
மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை
ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நடுநிலைப்பள்ளிகளாக இருந்து, உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்ந்தப்பட்டவைகளுக்கு, தனி வளாகம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால்,
பள்ளிகளுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு வசதிகள் தடைபடுகின்றன. அவ்வகையில்,
திருப்பூர் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் உள்ளன.
இதனால்,துவக்கப்பள்ளியும், உயர்நிலை வகுப்புகளும் ஒரே வளாகத்தில்
செயல்படுகின்றன. சில பள்ளி கட்டடங்கள், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில்
இருப்பதால், வகுப்பறை வசதி மேற்கொள்ள, கல்வித்துறைக்கு அனுமதி
கிடைப்பதில்லை. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை,
கல்வித்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்றியமைத்தால் மட்டுமே, உரிய கட்டமைப்பு
வசதிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையே உள்ளது.
இவ்வாறு மாற்றியமைக்க, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு, கல்வித்துறை
கொண்டு சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தரம் உயர்த்தப்பட்டு
மூன்று ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும், அதற்கான அடையாளமே இல்லாத வகையில்,
இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பிரச்னையால், தரம் உயர்த்தப்பட்டும்,
பயனில்லாத நிலையில் பள்ளிகள் செயல்படுகின்றன. உடுமலையில், திருமூர்த்தி
நகர் உயர்நிலைப்பள்ளி, அமராவதி நகர் மற்றும் கல்லாபுரம் உயர்நிலைப்பள்ளி
வளாகங்களில், துவக்கப்பள்ளிகளும் செயல்படுகின்றன.
துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இருப்பதால், கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., அல்லது எஸ்.எஸ்.ஏ.,
அல்லது பொதுப்பணித்துறை ஆகியவற்றில், எதை அணுகுவது என்ற குழப்பம்
ஏற்படுவதாக, பள்ளி நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். முதன்மை கல்வி
அலுவலர் முருகனிடம் கேட்டபோது,""பள்ளிகளிடம் இருந்து விண்ணப்பம்
பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை
தனியாக பிரிப்பதற்கான இடவசதி உள்ளதா என்பது குறித்து, மாவட்ட நிர்வாகம்
ஆய்வு மேற்கொண்டுள்ளது. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,''
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...