கல்வி கடன் வட்டி சலுகையை, 2014 - 15ல், கடன் பெற்றவர்கள் செப்., 15ம்
தேதிக்குள்ளும்; 2009 - 2014 வரை கடன் பெற்றவர்கள், அக்., 10ம்
தேதிக்குள்ளும் பெற வேண்டும்.'இந்த இறுதி வாய்ப்பை தவறவிட்டால், வட்டிச்
சலுகையை பெற முடியாது' என, இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கோரிக்கை:
வங்கிகள் அளிக்கும் கல்வி கடனுக்கு, வட்டிச் சலுகை அளிக்கும் திட்டம்
நடைமுறையில் உள்ளது. கடந்த காலங்களில், வட்டிச் சலுகை பெறுவதில் பெரும்
குழப்பம் நிலவியது. பல மாணவர்களுக்கு முழுமையாக வட்டிச் சலுகை
கிடைக்கவில்லை. 'அரசு அறிவித்த வட்டிச் சலுகையை மாணவர்களுக்கு முழுமையாக
அளிக்க வேண்டும்' என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையேற்று,
'2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரையில், கல்வி கடன்
பெற்றோருக்கு, வட்டிச் சலுகை அளிக்க வேண்டும்' என, இந்தியன் வங்கிகள்
சங்கத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.இந்த
கோரிக்கையை ஏற்று, வட்டிச் சலுகை அளிப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த மாதம்,
26ம் தேதி, இந்திய வங்கிகள் சங்கம் வங்கிகளுக்கு அனுப்பியது. இதில்,
முன்னோடி வங்கியான கனரா வங்கிக்கு, வட்டிச் சலுகை விவரங்களை, பிற வங்கிகள்
அளிக்க வேண்டும்.
இவற்றைத் தொகுத்து, மத்திய அரசுக்கு கனரா வங்கி அளிக்கும். இதன்பின்,
வங்கிகள் அளித்த வட்டிச் சலுகையை, மத்திய அரசு, வங்கிகளுக்கு திருப்பி
அளிக்கும். வட்டிச் சலுகையை தொகுத்து, கனரா வங்கிக்கு அளிக்க வேண்டிய இறுதி
நாளையும், வங்கிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்வி கடன்
பெற்றவர்களுக்கான, வட்டிச் சலுகை விவரங்களை, அக்., 10ம் தேதிக்குள்ளும்;
2014 - 15ல் கடன் பெற்றவர்களுக்கான வட்டிச் சலுகை விவரங்களை வரும், 15ம்
தேதிக்குள்ளும், கனரா வங்கிக்கு வங்கிகள் அளிக்க வேண்டும். மாணவர்கள்
வட்டிச் சலுகை பெற, இது தான் கடைசி நாள்.
இதுகுறித்து, கல்வி ஆலோசனை குழு அமைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:'வட்டி
சலுகை அளிப்பதற்கான இந்தியன் வங்கிகள் சங்கத்தின் சுற்றறிக்கை பல வங்கி
கிளைகளுக்கு செல்லவில்லை' என, புகார் எழுந்தது. தொடர் வற்புறுத்தலுக்கு
பின், அந்த சுற்றறிக்கை வங்கி கிளைகளுக்கு சென்று விட்டதாக, சில வங்கி
நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
உரிமை உண்டு:
கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தங்களின் கணக்கு விவரங்கள் கனரா
வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதை, வங்கி கிளைகளில் மாணவர்கள் அறிந்து
கொள்ளலாம். வட்டி சலுகை பெற, விண்ணப்பங்களையும் அளிக்கலாம். இதற்கான உரிமை,
மாணவர்களுக்கு உண்டு. தகவல் தெரிவிக்க மறுக்கும் வங்கி கிளைகள் குறித்து,
சம்பந்தப்பட்ட வங்கித் தலைவர் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கு புகார்
செய்யலாம்.
தொழிற்கல்வி படிப்புக்கு...:
கல்வி கடன் வட்டிச் சலுகை பெற, தொழிற்கல்வி படிப்புகளுக்கு, கடன்
பெற்றிருக்க வேண்டும்; இந்திய வங்கிகள் சங்க கல்வி கடன் திட்டத்தின் கீழ்,
இந்தியாவில் படிக்க கடன் வாங்கியிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு
வருமானம், 4.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
B.Ed course padika 2009 vankiya Education lone nan muriyaka Emi seluthi varukeran. Itharku vadi salukai unda solunga please.
ReplyDelete