பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின்
வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்தது.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்துக் கழக மானியக்
கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர்
பி.தங்கமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
*பணியின்போது இறக்கும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின்
அடிப்படையில், கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். அது ஒரு
போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பணியிடங்கள் வீதம் 8 போக்குவரத்துக்
கழகங்களுக்கு 800 பணியிடங்கள் என, 2 ஆண்டுகள் பயிற்சியளித்து
நிரப்பப்படும்.
*பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஊழியர்களின் குழந்தைகளை
ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் முதல் 10
குழந்தைகளின் மேல் படிப்புக்கான கல்விக் கட்டணம் அரசால் திரும்ப
வழங்கப்படும்.
*போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிமங்களைப் புதுப்பிக்கும்போது செலுத்தும் கட்டணம் அரசால் திரும்ப வழங்கப்படும்.
ரொக்கப்பரிசு உயர்வு: போக்குவரத்துக் கழகத்தில் ஓர் ஆண்டு விபத்தின்றிப்
பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசு ரூ.
1,000 தொகை, ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இத்தொகை, ஐந்து ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநருக்கு ரூ. 5,000
ஆகவும், 10 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு ரூ. 10,000
ஆகவும் நிகழாண்டு முதல் வழங்கப்படும்.
மேலும், 15 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு
வழங்கப்படும் ரூ. 10,000 ரொக்கப் பரிசு இனி ரூ. 15,000 ஆக உயர்த்தி
வழங்கப்படும். 20 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு
வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 15,000 இனி ரூ. 20,000 ஆக உயர்த்தி
வழங்கப்படும்.
25 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும்
ரொக்கப் பரிசு ரூ. 20,000 இனி ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...