Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்

        Education is the most powerful weapon which you can use to change the world – Nelson Mandela.



         குழந்தைகளின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதரமாய் விளங்குவது தொடக்க கல்வி ஆகும். இத்தொடக்க கல்வி தரம் உள்ளதாக இருத்தல் அவசியம் ஆகிறது. கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேற வேண்டிய திறன்களை வளர்த்தெடுப்பதும், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும்.


ஒவ்வொரு மாணவனும் தனது 5 வயது பூர்த்தி அடைந்த  நிலையில் பள்ளிக்கு வருகின்றான். இந்த பிள்ளைப்பருவத்தில் , அவனது அறிவு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. பல கேள்விகளைக் கேட்டுத் துளைப்பதும் காரணங்களை அறிய முற்படுவதும் இப்பருவத்தின் முக்கிய நடத்தை ஆகும். இக்கேள்விகளுக்கான சிந்தனைகளைத் தூண்டுவதும் பதில்களைத் தரும் விதமாக ஆசிரியர்களின் செயல்பாடுகளும், பள்ளிச் சூழலும் அமையப் பெற வேண்டும்.

குழந்தைகளின் சிந்தனைத் திறன்கள் வளர்ச்சியடைய ஆசிரியரின் ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. வகுப்பறை நிகழ்வுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க, அறிவு சார்ந்த கருத்துகள் மாணவரிடம் சென்றடைய ஆசிரியரின் மனப்பான்மை மிக முக்கியம்.

ஆசிரியர் தாம் கற்றுணர்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் சாதாரண முறையில் கொண்டு சேர்ப்பதும், படைப்பூக்க முறையில் அக்கருத்தினைச் செம்மைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் ஏற்ற உத்திகளைப் பயன்படுத்திப் பல துண்டல்கள் நிறைந்ததாகக் கொண்டு சேர்ப்பதும் அந்தந்த ஆசிரியரின் மனப்பான்மையை பொருத்தது.

இன்று ஆசிரியரின் செயல்பாடுகள் மாணவனின் கற்றலை துலங்கச் செய்வதாக இருக்கின்றனவா என்பது பொது மக்களிடையே பெரும் கேள்வியாக இருக்கிறது! மாற்றத்தை எதிர்ப்பார்த்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே, மாற்றம் நிகழ வேண்டியது ஆசிரியரின் மனதில் தான்.

ஒவ்வொரு மாணவரும் அறிவைப் பெற, கற்றலுக்கான சூழலில் ஆசிரியரின் பணித்திறனும், ஈடுபாடும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் பணித்திறனும் ஈடுப்பாடும் அவ்வாசிரியரின் மனப்பான்மையை ஓட்டியே அமைகிறது. ஆசிரியர் தன் பணி சார்ந்த திறன் மற்றும் திறமையை வளர்த்து கொள்ள தொழில்முறை பயிற்சிகளும் அதனை சார்ந்த செயல்திறனும் முக்கியம். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர் நிலையிலிருந்து நாள்தோறும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஆசிரியரின் தொழில் சார்ந்த திறன்களில் பாடங்கள் மற்றும் படிப்புகள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்தல், வளங்கள் நிர்வகித்தல், கற்றலை மதிப்பிடுதல் என பல இருந்தாலும், அதில் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களை புரிந்து கொள்ளாத நிலையில் தான் ஆசிரியர்களை சமுதாயம் போற்ற மறுக்கிறது.

Those who educate children well are more to be honored than they who produce them. – Aristotle.

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு முறை குறித்து பேசும் போது இந்தியா முழுவதும் நிலமை ஒன்றாக இருப்பதாகத் தான்  கருத முடிகிறது. சமீபத்திய பெங்களூர் நிகழ்வு இதற்கு உதாரணமாக கொள்ளலாம். அதேப்போல் கோர்ட் வரை சென்று தினம் செய்தி தாள்களில் பரப்பரப்பாக பேசப்பட்ட தமிழகத்தில் ஒரு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒரு மாணவருடன் ஓடிவிட்டார் என்ற செய்தி. 12 வயது சிறுவனை தாக்கி கன்னங்களிலும் காதுகளிலும் இரத்தக்காயம். ஏற்படுத்திய ஆசிரியர் கைது. இப்படி செய்திகள் அவ்வப்போது வந்து நம்மை கதி கலங்க செய்கின்றன!

இப்படி பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் ஆசிரியருடன் பழகுவதில் ஏதோ சிக்கல் உள்ளதாக படுகிறது! ஆசிரியர் மாணவர்கள் உறவு சரியாக இல்லாத பட்சத்தில், உளவியல் ரீதியாக சிக்கல் இருக்கும் பட்சத்தில்  மாணவர்களைப் புரிந்து கொள்ளுதல் எப்படி சாத்தியமாகும்!

இவ்வாறு வரும் செய்திகளை கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களை குறை கூறிவிடுதலும் நல்லதல்ல. ஓடிப்போதல் , அடித்தல், காயம் ஏற்படுத்துதல், மாணவர்களை கண்டு கொள்ளாது இருத்தல், பள்ளிக்கு தாமதாமாக வருதல், மாணவர் நலனில் அக்கறை கொள்ளாது இருந்தல் போன்ற செய்கைகள் தனிப்பட்ட சில மனிதர்களின் மனோவக்கிரத்தின் செயல்பாடாகும்.  ஆனால், இப்படிப்பட்டவர்கள் செய்கைகள் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் அவமானம் அடைகின்றது.

இவைகளை கருத்தில் கொள்ளும் போது இது தனிபட்ட நபர்களின் மனோவக்கிரமா? அல்லது  ஒட்டுமொத்த சமுதாயத்தின் தரவீழ்ச்சியின் வெளிப்பாடா? எனவும் சந்தேகம் கொள்ள செய்கின்றது.  இந்நிகழ்வுகளை யார் தடுக்க தவறியது? தலைமையா? இல்லை முறையான கண்காணிப்பு இன்மையா? என்ற கேள்விகளும் நம்மை மேலும் அச்சுறுத்துவதாக உள்ளன.

நான் படிக்கும் காலங்களில், சுமார் 30 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழல் இப்போது இல்லை. அப்போது குடும்ப தலைவரான அப்பா மீது பயம் கலந்த மரியாதை இருந்தது. அதேப்போல் மரியாதையை நாம் ஆசிரியர்களுக்கும் கொடுத்தோம். ஆனால், இன்று குடும்ப சூழல் மட்டுமல்ல, சமுக சூழலும் மாறி உள்ளது. மாணவர்கள் ஆசிரியரை விட தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பலம் பொருந்தியவனாக உள்ளான்.  அது மட்டுமல்லாமல் குடும்பங்களில் பணமே பிரதானமாக உள்ளது. தனிநபர் வருமானத்தை நம்பி வாழும் நிலையில் குடும்பங்களிலேயே மரியாதை என்பதும் கேள்வி குறியாக உள்ளது. இந்த சூழலில் இருந்து வரும் தற்போதைய இளம் ஆசிரியர்களிடம் நாம் உன்னதமான பண்புகளை எதிர்பார்ப்பது தவறே! அடிப்படை நடத்தை விதிகள் இன்றி பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்படுவது யாருடைய தவறு?

இன்று பள்ளிகள் ( தனியார், அரசு, அரசு நிதிஉதவி ) வீழ்ச்சி எனபது ஆசிரியர்களின் நடத்தையை முக்கிய காரணமாக கொண்டுள்ளது. பள்ளியின் வளர்ச்சி என்பது ஆசிரியர் மாணவர் உறவு நிலையின் மேம்பாட்டில் உள்ளது.

இன்று ஆசிரியர்கள் இளம் வயதில் வேலைக்கு வருகிறார்கள். சேல்ஸ் ரெப்,போலீஸ், தனியார் கம்பெனியில் கணக்கு பிள்ளை என்ற நிலையில் இருந்து பொருளாதார மேம்பாட்டிற்காக ஆசிரியர் வேலைக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு  ஆசிரியர் பணி அனுபவம் கிடையாது. வாழ்க்கை அனுபவமும் குறைவு. அவர்களுக்கு போதுமான அளவு பயிற்சி என்பது சாத்தியமில்லாதது. மூத்த ஆசிரியர்கள் வழி காட்டுதல் மிகவும் அவசியம். ஆனால் இவர்கள் எவருடனும் பழகுவதில்லை.

அதுமட்டுமல்ல, அவ்வாசிரியர்களின் குடும்ப சூழல்(பொருளாதார சூழல்) அவ்வாசிரியர்களின் பணியினை பாதிப்பதாக உள்ளது. காலை எழுந்து குடும்பத்திற்கு வேலை பார்த்து, சோர்ந்து பள்ளிக்கு வருவதால்,, பிஞ்சு மனங்களை கையாளும் பக்குவம் இல்லாத நிலையில் தினசரி செய்திகளில் எவ்வகையிலாவது வருவது எதார்த்தமே!

பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆசிரியர் மாணவர் உறவு நிலையில் நல்ல அணுகுமுறை சாத்தியம். கிராம கல்விக் குழுவை தலைமையாசிரியர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முக்கியம்.
இவை எல்லாவற்றையும் விட அவ்வாசிரியரின் மனமாற்றம் முக்கியம்.

The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences- Rabindranath Tagore.

நல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிப்பறை, நல்ல காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகம் ஆகியவற்றை கொண்டதாகும். அதை விட முக்கியம் ஆசிரிய மாணவ நல்லுறவு ,மாணவர்கள் சுதந்திரமாக இடைவினையாற்றும் வகையில் வகுப்பறை அமைதல், குழந்தைகளின் இயல்பான திறன்களை வெளிகொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணம், ஆசிரியர் பயன்படுத்தும் புதிய உத்திகள், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடத்தைகள் ஆகியவை ஒரு பள்ளியின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன.   

மாணவர்களுக்கு தன்சுத்தம் கற்றுதருதல் மூலம் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் பட்சத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் சுமூகமா பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. பள்ளிகளில் மரம் ஊன்றுதல், தோட்டம் அமைத்தல், தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை அலங்கரித்தல் ஆகிய நிகழ்வுகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் போது மாணவர்கள் ஆசிரியருடன் இணக்கமாக பழக வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே அவர்களிடையே நல்லுறவை வளர்க்கின்றன.

பள்ளியின் மாணவர் சேர்க்கை, அன்றாட நிகழ்வுகளில் VEC, SMC ஆகியவற்றின் ஒத்துழைப்பை நாடும் போது பெற்றோர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு தருவார்கள். ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து பொறுப்பாக செயல்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு உதவ முடியும்.
பள்ளிகளில் உள்ள டிவி, டிவிடி, கணினி போன்றவற்றை மாணவர்கள் கையாள்வதற்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப அறிவு கொண்டவராக மாணவர்கள் திகழவும். ஆசிரியர் மாணவர் உறவு மேம்படவும் வாய்ப்பு பெருகுகின்றது.
மாணவர்களிடம் அகராதியை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துதல் மூலம் புதிய சொற்களை உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் கல்வி சார் செயல் வலுவடையும். 

மாணவர்கள் கதை சொல்ல அனுமதித்தல், ஓவியம் வரைய வாய்ப்பு உருவாக்கி தருதல், சமூக விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், விளயாட்டு முறை யில் கற்று தருதல், வில்லு பாட்டு மூலம் கற்பித்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் கருத்துக்கள் எண்ணங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கின்றன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்களிடம்  மரியாதையுடனும் சக மாணவர்களுடன் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக பழக வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

ஆசிரியர் மாணவர் உறவு நிலை உளவியல் சார்ந்து இருந்தாலும், அது எதார்த்தமான மரியாதையுடன் மதிப்பு மிக்கதாக அமைய வேண்டுமானல்,கல்வி குழந்தை மையமாக இயங்கு வேண்டும். வகுப்பறை செயல்பாடுகள் நிரம்பியதாக உயிரோட்டத்துடன் அமைய பெற்று, எல்லா வகுப்பறை வளங்களையும் பயன்படுத்தி கற்றுதருவதாக அமையும் பட்சத்தில் எதிர்பார்த்த நல்ல விளைவுகளை மாணவர்களிடம் உருவாக்கும். மேலும் பெற்றோர், நிர்வாகிகள்,  தலைமை வகிப்பவர்கள் ஆசிரியர்களை நன்றாக கண்காணித்து அவர்களிடம் உள்ள குறைகளை  கண்டுபிடித்து , உடனுக்குடன் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை செய்வதன் மூலம் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். 




1 Comments:

  1. சூப்பர்.. நிறைய புது சிந்தனைகளை தோற்றுவிக்க உதவியது..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive