Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!

       ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.
 
           வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால் தான் தர முடியும் என்ற உண்மையை தெரிந்து கொள்ளவும், 'இளமையில் கல்' என்ற முதுமொழி நமக்கு உதவுகிறது. மாறி வரும் காலச்சூழலால், கல்வி இன்றி வாழ்வே இல்லை என்ற நிலையுள்ளது. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அதை சொல்லித் தரும் ஆசிரியர் ஆவார். அந்த ஆசிரியர்கள் இல்லாமல் நாம் இல்லை. இந்த எழுத்து இல்லை.உலகில் முதன்மை பெற்றவன் இறைவன். எழுத்தில் முதன்மை பெற்றது அகரம். அந்த அகரத்தை கற்றுத் தருவதால், ஆசிரியரும் இறைவனே. ஆசிரியன் மற்றும் ஆதி என்ற சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. துாய அறிவினை நல்கும் ஆசிரியரின் தாள் பணிந்து கல்வி கற்றால், நற்பயனை அடையலாம் எனத் திருவள்ளுவர் தன் முதல் அதிகாரத்திலேயே கூறியுள்ளார். இவ்வளவு பெருமைகளையுடைய ஆசிரியர்களை போற்றி வணங்கும் நாளே ஆசிரியர் தினம்.

நாளும் நாடும் 
மற்ற விசேஷமான தினங்களை போல, ஆசிரியர் தினம் உலகம் முழுவதிலும், ஒரே நாளில் கொண்டாடப்படவில்லை. பல நாடுகள் பல வித மாதம், தேதிகளில் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகின்றன. அதைக் கொண்டாட காரணங்களும் வேறு விதமாக உள்ளன.
20ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் தான், ஆசிரியர் தினம் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது. அந்தந்த நாடுகளில் உள்ள, உள்ளூர் ஆசிரியர்களை பாராட்டும் நாள் தான், ஆசிரியர் தினம் என அழைக்கப்படுகிறது. அர்ஜென்டினா நாட்டில் டொமின் கோ பாஸ்டினோ சர்மியன்டோ என்ற கல்வியாளர் இறந்த தினமான செப்., 11ம் தேதி தான் 1915 முதல் அங்கு ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.நெதர்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ருமேனியா, ரஷ்யா, செர்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அக்., 5ல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளே உலக ஆசிரியர் தின நாள். இந்தியாவில் 1962 முதல் கல்வியாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான, டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்.,5 ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. குரு-சீடன் அன்றும்-இன்றும் பண்டைக்கால குருகுலக் கல்வி முறையில் ஆசிரியர், மாணவர்கள் உறவுமுறை சிறந்ததாக கருதப்படுகிறது. ஆறு வயது முதல் வாலிப வயது வரை கல்வி, கேள்வி, போர் முறைகள், ஆன்மிகம், அரசியல், வேத பாடங்கள் வரை முறையாக பயிற்சிகள் தரப்பட்டு, ஒரு சிறந்த மனிதனாக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. துரோணர், சுக்கிராச்சாரியார் ஆகியோரிடம் பயின்ற மாணவர்கள் கற்ற வித்தைகள் ஒன்று தான். ஆனால் அவர்கள் அதை உபயோகித்த விதம் வேறு. 
மண் ஆசையால் பிறந்த காவியம் மகாபாரதம். பெண் ஆசையால் கிடைத்த காவியம் ராமாயணம். கிருஷ்ணரும், ராமரும் மாணவர்களாக இருந்து பின்பு அவரவர் ஆசிரியர்களுக்கு பெருமையை சேர்த்தனர். குருவின் சிலையை வைத்தே வித்தைகளை கற்ற ஏகலைவன் மாணவர்களிடையே ஒரு தனி உதாரணம். பீஷ்மர், வசிஷ்டர், விசுவாமித்ரர், அகத்தியர், புத்தர், ஏசு கிறிஸ்து, முகமது நபி ஆகியோர் அவரவர் காலங்களில் சிறந்த குரு மற்றும் ஆசிரியர்கள் ஆவர்.
இசை, நடனம், ஆன்மிகம் மற்றும் நுண்கலைகளை குரு வழி நின்று பயின்றால் மேன்மை பெறலாம். உ.வே.சாமிநாத அய்யர் தன் ஆசான் வித்வான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையிடம் கல்வி பயின்றதையும், தன் குருவின் மேதா விலாசத்தை புகழ்ந்து தன் நுால்களில் கூறியிருப்பது என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.
கல்வி கணினிமயம் 
கல்வி, கணினிமயமாகிவிட்ட இக்காலத்தில், பல்துறை விற்பன்னர்கள் பல்கி பெருகிவிட்ட காரணத்தால், ஒருவரே ஆசிரியர் என்ற நிலை மாறி, ஒரு பாடத்திற்கு பல ஆசிரியர்கள் என்ற நிலை வந்து விட்டது. குரு- சிஷ்யன் என்ற நிலை மாறி மாணவ நண்பர்கள் என்ற நிலை வந்து விட்டது. ஆராய்ச்சி பிரிவுகளில் மட்டும் ஆசிரியர்- மாணவர் உறவு நிலை மாறாமல் இருப்பது சற்று ஆறுதல் தான்.
சேகரிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே கணினி தர முடியும். புதிய சிந்தனைகளை துாண்ட, ஆசிரியரின் போதனைகளே காரணம் என்பதை, மாணவர்களும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றம், கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைகிறது. எழுத்தறிவின்றி ஒரு குடிமகன் இருந்தாலும், அந்நாடு உண்மையான நாடல்ல என மவுலானா அபுல் கலாம் ஆசாத் கூறியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது. 
இதே கருத்தைதான் டாக்டர் அப்துல் கலாம் தன் பாணியில், 'அனைவரும் கல்வி பெற கனவு காணுங்கள். உங்களை துாங்க விடாமல் செய்கின்ற கனவுகளை காணுங்கள். சிறந்த கல்வி பெறுங்கள். உங்களுடன் சேர்ந்து நாட்டையும் வல்லரசாக மாற்றுங்கள்' என்று அறைகூவல் விட்டு சென்றதை ஆசிரியர்களும், மாணவர்களும் மறக்க இயலாது. கடைசி மூச்சு உள்ள வரை அவர், உண்மையான ஆசிரியராக இருந்து மறைந்தார்.
கல்வியில் உயரலாம் 
ஒருவனுக்கு அழிவற்ற செல்வம் கல்வி தான். மற்றவை செல்வமல்ல என்ற உண்மையை போதித்த ஆசிரியரை, நாம் தினம் தினம் தொழுது பாடங்களை பயில வேண்டும். படிப்பனவற்றை பழுது இல்லாமல் படிக்க வேண்டும் என்றும், செல்வம் உள்ளவர் இடத்தில் பணிந்து நின்று கேட்பது போல, ஆசிரியரிடத்து மாணவர்கள் ஏக்கத்துடன் தாழ்ந்து நின்று கற்றால், கல்வியில் உயரலாம் என திருக்குறள் கூறுகிறது. இவ்வாறு பயிலும் மாணவர்கள் ஏழு தலைமுறையும் நலமுடன் புகழுடன் வாழ முடியும். பாடங்களை படிக்கும் போது, நாம் அதற்குரிய நல்ல மனநிலையில் இருப்பது இன்றியமையாதது.
நல்ல மனநிலையில் இருந்து செயல்பட்டால், சிறப்பான பலனை பெற முடியும். நசிகேதன், எமர்தர்மராஜனிடம் கேட்ட கேள்வி-பதில்களை கடர் என்பவர் உபநிடதமாக வழங்கியுள்ளார்.அதில் 'ஆசிரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக. அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக. நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக. கற்றது நமக்கு பயனுள்ளதாக விளங்கட்டும். எதற்காகவும் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் இருப்போமாக. அமைதி... அமைதி... அமைதி...' என்கிற கருத்துடைய அமைதி மந்திரத்தை கூறியுள்ளார்.இந்த மையக்கருத்தை மனதில் நிறுத்தி, ஆசிரியர்களிடம் மாணவ, மாணவியர் கல்வி பயின்றால் பெற்ற தாய்க்கும், பிறந்த பொன் நாட்டிற்கும் நலமும் வளமும் சேர்க்கலாம்.- முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive