Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், "உலகமே உள்ளங்கையில் என்னும் வகையிலும் விளங்கும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை ஆப்டிகல் ஃபைபர் (Optical Fibre) மூலமாக இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் "பாரத்நெட்" என்ற திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத் தான் செயல்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அரசு இத்திட்டத்தினை தமிழகத்தில் தமிழ்நாடு அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்...
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இத்திட்டத்தினை 3,000 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும்.
"தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன்"
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கென "தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்" (Tamilnadu Fibre Net Corporation ) என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 11.8.2014 அன்று "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும், இதர இணைய தள சேவைகள் வழங்கப்படும்" என நான் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடமிருந்து, தமிழ்நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய தள சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிமத்தினை (ISP Licence) பெற்றுள்ளது.மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் அதிவேகஅகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய தள சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்திய ரெயில்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.முதற்கட்டமாக சுமார் 552 உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இச்சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இதன் சேவைத் திறன் மற்றும் செயல்பாடு குறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் மிக கவனமாக ஆய்வு செய்து வருகிறது.
"இல்லந்தோறும் இணையம்"
"பாரத்நெட்" மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ள Internet Service provider உரிமத்தினை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும்.மேலும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய தள சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக "இணைய வழி தொலைக்காட்சி" சேவைகளும் (Internet Protocol Television - IPTV ) வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை நன்குணர்ந்த அரசு, இ-சேவை மையங்கள் வழியாக அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மின் மாவட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அரசு சார்ந்த பிற சேவைகள் இம்மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் விரிவாக்கம் செய்து நான் துவக்கி வைத்தேன். தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற ஏழ்மை குறைப்பு குழு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலமாக அமைக்கப்பட்ட 10,034இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றுகள், ஓய்வூதியம் மற்றும் சமூகநலத் துறையின் சேவைகளான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் கல்வி உதவி சார்ந்த சேவைகள் உள்ளிட்ட 36 சேவைகள் இம்மையங்களின் மூலம், வழங்கப்படுகின்றன.இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின், இதுவரை சுமார் 70 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியும் பேருவகையும் அடைகிறேன்.
2015-16ஆம் ஆண்டில் இ-சேவை மையங்கள் மூலம் தற்போது அரசுத் துறைகளால் வழங்கப்பட்டு வரும் சேவைகளுடன், கூடுதலாக மேலும் 300 சேவைகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இ-சேவை மையங்கள் மூலமாக இந்த கூடுதல் சேவைகளை வழங்கிட அரசுக்கு 10 கோடிரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மேற்கூறிய திட்டங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் பயன் பொதுமக்களை சென்றடைய வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive