தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம்
செய்யப்படுவதாகவும், தேர்தலை மனதில் கொண்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.
சென்னை உள்பட தமிழகத்தின் சில இடங்களில் சீரான குடிநீர்
விநியோகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக (ஜெ.அன்பழகன்),
மார்க்சிஸ்ட் (பாலபாரதி), இந்திய கம்யூனிஸ்ட் (குணசேகரன்), மனிதநேய மக்கள்
கட்சி (ஜவாஹிருல்லா), பாமக (கணேஷ்குமார்), புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி)
ஆகியோர் பேசினர். அவற்றுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதில்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, புழல்,
செம்பரம்பாக்கம் ஆகியவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழைப் பொழிவு குறைவாக
உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கிணறுகளை
வாடகைக்கு அமர்த்தி மழையில்லாத சூழலிலும் நாளொன்றுக்கு சுமார் 100
மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், நாளொன்றுக்கு 540 மில்லியன் லிட்டர் குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது.
போதிய நீர் அழுத்தம் இல்லாத பகுதிகளுக்கு இப்போது குடிநீர் லாரிகளின்
எண்ணிக்கை 350-லிருந்து 560-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
நாளொன்றுக்கு சராசரியாக 5,500 நடைகள் குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி பகுதிகளைச் சேர்ந்த 20 லட்சம்
மக்களுக்கு 101 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் எட்டு கூட்டு குடிநீர்த் திட்டங்கள்
செயலாக்கத்தில் உள்ளன. புதியதாக மேலும் எட்டு பெரிய திட்டங்களைச்
செயல்படுத்த ரூ.2,408.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையைத்
தவிர்த்து பிற மாநகராட்சிகள்-நகராட்சிகளில் 1,500 மில்லியன் லிட்டர்
குடிநீர் வழங்கப்படுகிறது. பேரூராட்சிகளில் ரூ.363.14 கோடியிலான குடிநீர்த்
திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் குடிநீர்
விநியோகம் செய்யப்படுவதை இணையதளம் மூலம் கண்காணித்து குடிநீர் பிரச்னை
உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது.
மழை போதிய அளவு இல்லாத நிலையிலும், தமிழக அரசு நல்ல முறையில் குடிநீர்
விநியோகம் செய்து வருகிறது. அப்போதெல்லாம் திமுகவினர் ஒன்றும் பேசவில்லை.
இப்போது தேர்தல் நெருங்குவதால் பொய்ப் பிரசாரங்கள் செய்து, மறியல்
போராட்டங்களை நடத்துகின்றனர் என்றார் அமைச்சர் வேலுமணி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...