Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம்

டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட மின்இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? என்பதற்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

டிஜிட்டல் மீட்டர்

தமிழகத்தில் உள்ள மின்சார இணைப்புகளை பெற்றுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள பழைய மின்மீட்டர்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிதாக டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கியுள்ளது. 

இவ்வாறு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார கட்டணம் கூடுதலாக வருவதாக பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளுக்கு மின்சார கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மின்சார வாரிய உயர்அதிகாரிகள் தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

துல்லியமாக மின்சாரம் கணக்கீடு

கேள்வி:- வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதன் நோக்கம் என்ன?

பதில்:- மின்சார நுகர்வை துல்லியமாக கணக்கிடப்படுவதற்காகவும், பழுதான மின்சார மீட்டர்களை மாற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- நவீன மயம் என்றாலும், டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மின்சார கட்டணம் 2 மடங்கு அதிகமாக வருவதற்கு என்ன காரணம்?

பதில்:- வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரம் துல்லியமாக கணக்கிடப்படுவதால், கட்டணமும் அதிகரிக்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் உள்ள சுவிட்ச் போர்டில் உள்ள இண்டிகேட்டர் மற்றும் ஜீரோ வாட்ஸ் பல்புகள், எல்.ஐ.டி. பல்புகள் போன்றவை பயன்படுத்தினால் பெரிதாக மின்சார மீட்டரில் மின்சார பயன்பாடு கணக்கிடுவதில்லை. ஆனால் தற்போது மிகவும் குறைவாக மின்சார நுகர்வு இருந்தாலும் அதனை துல்லியமாக கணக்கிடப்படுவதால் கட்டணம் அதிகமாகிறது. 

கட்டண உயர்வை தடுக்க என்ன வழி 

கேள்வி:- ஏற்கனவே மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஜிட்டல் மீட்டர் மூலம் மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? இதனை தடுக்க என்னவழி?

பதில்:- வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக டிவியை நிறுத்திவிட்டு, மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, செல்போனை ‘சார்ஜ்’ செய்துவிட்டு மெயின் சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, இதேபோன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்றவற்றை அதனுடைய சக்திக்கு மீறி பயன்படுத்துவது, கணினியை பயன்படுத்திவிட்டு சுவிட்சை ஆப் செய்யாமல் இருப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் ஆன உடன் உடனடியாக சுவிட்சை ஆப் செய்யாமல் இருந்தாலும் டிஜிட்டல் மீட்டரில் மின்நுகர்வு பதிவாகிவிடுகிறது. இதனாலேயே கட்டணம் அதிகரிக்கிறது. எனவே மின்சாதனங்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால், மின்சார கட்டணம் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும். 

விதிவிலக்கல்ல

கேள்வி:- டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதற்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

பதில்:- நவீன மயமாக்குதல் திட்டத்தின் அடிப்படையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதால் பொதுமக்களிடம் இதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. மாறாக தனியார் நிறுவன ஊழியர்களை வைத்து மின்சார மீட்டர் பொருத்தப்படுகிறது. ஒரு இணைப்பு (சிங்கிள் பேஸ்) கொண்ட மின்சார மீட்டர்கள் மாற்றுவதற்கு ரூ.10-ம், 3 இணைப்பு கொண்ட மின்சார மீட்டர்கள் மாற்றுவதற்கு ரூ.25-ம் கட்டணத்தை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மின்சார வாரியம் வழங்குகிறது.

கேள்வி:- பழைய மீட்டர்களையே வைத்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்களா?

பதில்:- அவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை. இதில் எவருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை.

யார் அதிகம்பாதிக்கப்படுகிறார்கள்?

கேள்வி:- டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

பதில்:- மின்சார கட்டணம் ரூ.300 வரை செலுத்துபவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை, மாறாக ரூ.1000 வரை பணம் கட்டுபவர்கள் தங்களுடைய கவனக்குறைவால், தேவையில்லாத இடங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்துவதால், அவர்களுக்கு மின்சாரத்தின் அளவு துல்லியமாக கணக்கிடப்படுவதால் கட்டணம் கூடுதலாக வருகிறது. கவனக்குறைவை போக்கிக் கொள்வது நல்லது. 

ஒரு கோடி இணைப்புகள்

கேள்வி:- தமிழகம் முழுவதும் எவ்வளவு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன? எந்த ஊரில் அதிகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன?

பதில்:- தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 2 கோடியே 29 லட்சம் மின்இணைப்புகளுக்கும் புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட உள்ளன. அதில் இதுவரை ஒரு கோடியே 3 லட்சம் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஒரு கோடியே 26 லட்சம் மின்இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின்சார மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 29 லட்சத்து 53 ஆயிரம் மின்சார இணைப்புகளில் 19 லட்சத்து 35 ஆயிரம் இணைப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

சென்னை முதலிடம்

கேள்வி:- தமிழகத்தில் டிஜிட்டல் மீட்டர்கள் எவ்வளவு சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன?

பதில்:- தமிழகத்தில் உள்ள 9 கோட்டங்களில் சென்னையில் அதிகம் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை தெற்கு 48 சதவீதம், சென்னை வடக்கு 91 சதவீதம், கோயம்புத்தூர் 40 சதவீதம், மதுரை 42 சதவீதம், ஈரோடு 44 சதவீதம், திருச்சி 38 சதவீதம், திருநெல்வேலி 35 சதவீதம், விழுப்புரம் 34 சதவீதம், வேலூர் 54 சதவீதம், 

கேள்வி:- விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுமா?

பதில்:- விவசாய மின்இணைப்புகளுக்கான மின்மீட்டர்கள் டிஜிட்டல் மயமாக்கும் எண்ணம் தற்போது இல்லை. தொழிற்சாலைகளை பொருத்தவரையில் மின்இணைப்பு வழங்கும்போதே டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் பதில் அளித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive