கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் விற்பனை, கட்டுமானப்
பணிகள் போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி அலுவலர்
சங்கத்தினர் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணி, 150 டன் பழைய
விடைத்தாள்கள் விற்பனை, தொலைதூரக் கல்வி மையத்தின் தேசிய
ஒருங்கிணைப்பாளருக்கு கமிஷன் அதிகரித்தது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள்
நடைபெற்றிருப்பதாகக் கூறியும், இதுதொடர்பாக காவல்துறை விசாரணை கோரியும்
பல்கலைக்கழகத்தின் அலுவலர் சங்கத்தினர் கடந்த 24-ஆம் தேதி முதல் பணியைப்
புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை
பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள வனப் பகுதியில் ஏராளமான விடைத்தாள்கள் உள்ளிட்ட
ஆவணங்கள் மர்மமான முறையில் எரிக்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தலைமையில் ஆட்சிக்
குழுவின் துணைக் குழு, விசாரணைக் குழு, போராட்டக் குழுவினர் கலந்து கொண்ட
அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நிர்வாகம் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து முடிவு
செய்யப்பட்டது. இதையடுத்து, விடைத்தாள் முறைகேடு தொடர்பான விவகாரத்தில்
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸை தாற்காலிக பணி
நீக்கம் செய்ய உறுதி அளிக்கப்பட்டது. மேலும் அவர் திங்கள்கிழமை முதல்
கட்டாய மருத்துவ விடுப்பில் செல்ல நிர்பந்திக்கப்பட்டார்.
மேலும், தொலைதூரக் கல்வி மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம்
என்பவர் மூலம் பெங்களூரு அம்ரோசியா நிறுவனம் சார்பில், பாரதியார்
பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகளை நிறுத்திக் கொள்ளவும்
முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக நிறுவனத்திடம்
இருந்தும் வெங்கடாசலத்திடம் இருந்தும் கடிதம் பெறப்பட்டிருப்பதாக உறுதி
அளிக்கப்பட்டது. தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றும் மனோஜ்,
சண்முகம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிதி
ஆதாரங்கள், செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வரும் 4-ஆம் தேதிக்குள்
ஆட்சிக் குழுவின் துணைக் குழு வழங்க வேண்டும் என்றும் முடிவு
செய்யப்பட்டது.
இதற்கிடையே தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதால்
போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்புவதாக அலுவலர் சங்கம்
தெரிவித்தது. இதையடுத்து அலுவலர்கள் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...