தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை உருவாகும் என
முதல்வர் தெரிவித்தார்.
இது தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "கடந்தநான்கரை ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.உயர் கல்வி துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011-ல் உயர் கல்வியில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதாவது (GROSS ENROLLMENT RATE) தற்போது 42.8 சதவீதத்தை எட்டிஇந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கடந்த 25-ம் தேதி உயர் கல்வித் துறை மூலம் செயல்படுத்த உள்ள பல அறிவிப்புகள் இந்த மாமன்றத்தில் வெளியாகின. அப்போது 5 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 5 உறுப்பு கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லை. இம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் தரமான உயர் கல்வி பெறும் பொருட்டு, தேனி மாவட்டம், வீரபாண்டியிலும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்காக அரசுக்கு ஒரு கல்லூரிக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் வீதம் மூன்று கல்லூரிகளுக்கு 25 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை இதன் மூலம் உருவாகும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.கே.நகரில் அரசுக் கல்லூரி:
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் அரசுக்கு 8 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...