அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே
ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக்
கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர் குமார், புதுவையில்
இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார். கழிப்பறை பராமரிப்பு குறித்த இந்த சுற்றறிக்கையில்,
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளிகளின் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தியுள்ளது.
இதன் அடிப்படையில், புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளிகளிலும் சுழற்சி முறையில் பொறுப்பு ஆசிரியர்களை நியமித்து,
கழிப்பறைகளை பராமரித்து, அனைத்து கழிப்பறைகளுக்கும் தண்ணீர் வசதி உள்ளது
என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கழிப்பறைகளின் பைப்
லைன்கள் சேதமடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கவனிப்பதோடு, பள்ளி வளாகம்
முழுவதையும் தூய்மையாக வைத்து கழிப்பறைகளை முறையாக பராமரிக்கவும்
வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான கழிவறைகளையே ஆசிரியர்கள்
பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில்
மாணவர்களின் கழிப்பறைகள், மிக மோசமான சுகாதாரக் கேடுடன் இருக்கும்.
அதே சமயம் ஆசிரியர்களின் கழிப்பறைகள் மட்டும் எப்போதும் பளிச்சென சுத்தமாக
இருக்கும். இதை மனதில் கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை அந்த அதிரடி உத்தரவை
பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அதிரடி அறிவிப்பு,
ஆசிரியர்கள் மத்தியில் கசப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு, பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...