கிராமப்புறத்தைச் சேர்ந்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்
தரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.இந்தப் பல்கலைக்கழகத்தில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்த அவர்
பேசியது:
மாணவர்களிடையே உள்ள திறனைக் கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களும் பயன்பெறுவர்.இதேபோல, தஞ்சாவூர் எம்.பி. கேட்டுக் கொண்டபடி, கிராமப்புறப் படிக்காத இளைஞர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து வேலைவாய்ப்புப் பெற்றுத் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 5,000 கிராமப்புற இளைஞர்கள் பயனடைவர். இந்த இரு திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளன.இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தமிழக அரசு ரூ. 9 கோடி நிதி வழங்கியுள்ளது. தொடர்ந்து கிடைக்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் பாஸ்கரன்.
பின்னர், செய்தி மலரை மேயர் சாவித்திரி கோபாலும், புதிய நூல்களைப் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் அ. அறிவுநம்பியும் வெளியிட்டனர். 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனையை தஞ்சாவூர் எம்.பி. கு. பரசுராமனும், புதுப்பொலிவு கொண்ட பல்கலைக்கழக இணையதளத்தை ஆட்சிக்குழு உறுப்பினர் சு. பாலசுப்பிரமணியனும் தொடக்கி வைத்தனர்.முனைவர் கு. ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார்.முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம் வரவேற்றார். முனைவர் சா. உதயசூரியன் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...