கல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்!
ஆசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை
செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக
மாற்றியவர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப்
பாடங்களையும் முழுமையான காணொலியாக மாற்றியவர்.
காணொலிக் குறுந்தகடுகளை
தமிழகம் முழுக்கவுள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருபவர். ஓவியராக
ஆசைப்பட்டவர், அப்பாவின் ஆசையால் ஆசிரியர் ஆகியிருக்கிறார். 2004-ம் ஆண்டு
கடலூர் மாவட்டம், காளியான்மேடு என்னும் ஊரிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில்
தனது பணியைத் தொடங்கிய ஆசிரியர் குருமூர்த்தியின் மனநிலை எப்படி இருந்தது?
"நான் படித்த காலத்தில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை.
முக்கியமாக நான் படித்த பள்ளி அப்படித்தான் இருந்தது. நான் பட்ட துன்பத்தை
என் மாணவர்களும் படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் எனது பணியை
ஆரம்பித்தேன். காளியான்மேட்டில் ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்த பின்னர்,
குருக்கத்தஞ்சேரிக்கு மாற்றல் கிடைத்தது.
நான் போனபோது அங்கிருந்த ஆரம்பப்பள்ளி, 'கற்றலில் பின்தங்கிய பள்ளி' என்ற பெயரோடு குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளியாக இருந்தது. ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு உதவி ஆசிரியர்கள் ஆகிய மூவரோடு, நான்காவதாய் நானும் போய்ச் சேர்ந்தேன். அது செயல்வழிக் கற்றல் முறை தொடங்கப்பட்டிருந்த சமயம். பள்ளி முடித்து, வீட்டுக்கு வந்து இரவில் செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை செய்திருக்கிறேன். நான்கு வருடங்கள் எல்லா ஆசிரியர்களும் இடையறாது உழைத்தோம். அதன் பலனாய், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்தினம் அவர்களால், 'மாவட்டத்தின் 75 சிறந்த பள்ளிகளில் ஒன்று' என்ற விருது எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இசைக்கப்பட்ட இசைக் கருவிகள்
தலைமை ஆசிரியரின் உதவியோடு, டி.வி.டி, கணிப்பொறி, தொலைக்காட்சி உள்ளிட்ட
பொருட்களை வாங்கினோம். பள்ளியைச் சுற்றிலும் செடிகளை நட, மாணவர்கள் அதைப்
பராமரித்தனர். 60 வருடங்களாக ஆண்டு விழாவே நடக்காமல் இருந்த பள்ளியில்
முதல்முறையாக ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இசை உபகரணங்களைச் செய்து
மாணவர்களுக்கு அளித்தேன். தெர்மாகோலால் செய்யப்பட்ட வீணை, தபேலா, மத்தளம்
மற்றும் மின் அட்டைகள், விளக்கப்படங்கள் ஆகியவை மாணவர்களுக்குக்
கொடுக்கப்பட்டன. அடுத்தடுத்த நிலைக்குப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்,
திடீரென திருச்சிக்கு மாற்றல் வந்தது".
வீடியோ பாடங்கள்
2009-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள களத்தூர்
என்னும் ஊருக்கு மாற்றலானார் ஆசிரியர் குருமூர்த்தி. கற்பித்தலில்
கணிப்பொறி அறிமுகமாகத் தொடங்கிய காலம் அது. "ஒருநாள், வகுப்பில், சமூக
அறிவியல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் கடல் பற்றிய பாடம் வந்தது;
மெரினா கடற்கரையைப் பற்றி விளக்கினேன். ஆனால், வீட்டைவிட்டு,
வெளியூருக்குக்கூட சென்றிருக்காத சில குழந்தைகளுக்கு கடலைப் பற்றி எதுவும்
தெரியவில்லை; அந்தப் பாடமும் புரியவில்லை. அப்போதுதான் எனக்கு, பாடங்களைக்
காணொலியாக்கிக் காண்பிக்கலாமே என்று தோன்றியது. வார்த்தைகளில் விளக்க
முடியாத பாடங்களை, மாணவர்கள் காணொலி மூலமாக எளிதில் புரிந்துகொண்டனர்.
பின்னர் அதையே எல்லாப் பாடங்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்தேன்.
தினமும் பள்ளி முடிந்து இரவு நேரத்தில் வீடியோக்களை உருவாக்குவதை
பழக்கப்படுத்திக் கொண்டேன். மே மாத விடுமுறைக்கு, ஊருக்கே செல்லவில்லை. 2
வருடங்களில் கிட்டத்தட்ட 3000 மணி நேரங்களை, காணொலி உருவாக்கத்துக்காக
செலவிட்டிருப்பேன். பள்ளி நேரம் பாதிக்கப்படாதவாறு காணொலி உருவாக்கம்
இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தேன்.".
காணொலிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கணிதம் தவிர்த்து, தமிழ்,
ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களையும், பாட
வரிகளுக்கு ஏற்றவாறு, படங்களைத் தொகுத்து வீடியோவாக்கத்
தொடங்கியிருக்கிறார். உதாரணத்துக்குத் தமிழ்ப் பாடத்தை எடுத்துக் கொள்வோம்.
ஒரு நதி தனது வரலாற்றைப் பாடுவதாக ஒரு பாடம் இருக்கிறது. கல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்!
இந்த ஒற்றை வரிக்கு, ஒரு நதி மலையை, கானகத்தை, செடி, கொடி, மரங்களைக்
கடந்து பாய்ந்து வருவது போல காட்சிகள் அமைத்திருக்கிறார் ஆசிரியர்
குருமூர்த்தி. சில காணொலிகளில் பாட்டுகளும் பாடப்பட்டிருக்கின்றன. ஆசிரியை
சித்ரா மற்றும் அவரின் குழுவினர் ஒன்றாக இணைந்து ராகத்துடன் சில பாடல்களைப்
பாடிக் கொடுத்திருக்கின்றனர். தேனியைச் சேர்ந்த விஜயராஜா என்னும் ஆசிரியர்
மூலம் பொம்மலாட்டத்தைக் கொண்டு, சில பாடங்கள்
தொகுக்கப்பட்டிருக்கின்றன.புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர், 1,
2, 3-ம் வகுப்பு தமிழ்ப் பாடல்களுக்குத் தொழில்முறை பாடகர்களைக் கொண்டு
இசையமைத்து, பாடல்கள் பாடிக் கொடுத்திருக்கிறார்.
படிக்கத் தெரியாத மாணவர்களையும் படிக்கவைத்த பள்ளி
"எங்கள் பள்ளியில் படித்து, ஐந்தாம் வகுப்பை முடித்து வெளியே செல்லும்
மாணவர்கள் யாரும், இதுவரை எழுதப் படிக்கத் தெரியாமல் போனதில்லை. இதனாலேயே
'படிக்கத் தெரியாத மாணவர்களையும் படிக்கவைத்த பள்ளி!' என்று பிரதான
சாலையில் ஃப்ளெக்ஸ் வைத்தோம். அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்து, ஆங்கில வழியில்
கல்வி கற்ற பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எங்கள் பள்ளியில்
சேர்ந்தனர்" என்கிறார்.
40 ஆயிரம் செலவில் 32 இன்ச் எல்ஈடி தொலைக்காட்சி, ஸ்பீக்கர், மைக் ஆகியவை பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. களத்தூர் பள்ளி என்ற
யுடியூப் சேனலில் பள்ளியின் ஆண்டுவிழா நடனங்கள், வகுப்பறை நிகழ்வுகள், கதை
சொல்லுதல் உள்ளிட்டவை பதிவேற்றப்படுகின்றன. செய்தித்தாள்கள் வாசிக்கும்
பழக்கத்தைத் தன் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியர் குருமூர்த்தி,
முக்கிய செய்திகளை வெட்டி, பள்ளியில் ஒட்டிவைக்கிறார். உலக நாடுகள் குறித்த
செய்திகள் வரும்போது, அந்த நாடுகளை உலக வரைபடத்தில் காண்பிக்கச் சொல்லி
உலக நாடுகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
அதுபோக, வருடம் முழுக்கவுள்ள சிறப்பு தினங்களைத் தொகுத்து அதைக்
காணொலியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார ஆசிரியர் குருமூர்த்தி
பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நல்ல உள்ளங்களின்
உதவி கிடைத்தால் பள்ளியின் வகுப்பறைகளுக்கு டைல்ஸ் மாற்றி, தண்ணீர்த்
தொட்டி அமைத்து, மாணவர்களுக்கு வட்டமேசைகள், நாற்காலி ஆகியவற்றை வாங்கிவிட
முடியும் என்கிறார். வாங்கிவிடுவாரா?
| மாணவர்கள்
மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும்
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |
Great....thodarga uum pani..
ReplyDeleteSuper sir
ReplyDeleteSuper sir
ReplyDeletekeep it up sir.congratulations.
ReplyDeletekeep it up sir.congratulations.
ReplyDeleteஅருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteVery nice
ReplyDeleteVery nice
ReplyDeleteCONGRATULATION.KEEP IT UP.PHONE NO.PLEASE .OR.CONTACT THIS NO.PLEASE
ReplyDeleteSir please I want that dvd
ReplyDelete