தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்
என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர்
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 4 ஆண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த
ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
தொடக்கப் பள்ளிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்புப்
பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
நடுநிலைப் பள்ளிக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி
ஆசிரியர்கள், புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர், இடைநிலை
ஆசிரியர் என 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தப் பள்ளிகளுக்குத்
தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.11
கோடியே 67 லட்சம் செலவு ஏற்படும்.
புதிதாக 770 கூடுதல் வகுப்பறைகள்: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,798 கோடியில்
பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
மேலும் 287 பள்ளிகளின் வகுப்பறைகள் பழுது சரிபார்க்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.56 கோடியே 53 லட்சம் செலவு ஏற்படும்.
பெரம்பலூர், கோவையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்: ஆசிரியர் கல்வி
பயில விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பலூர், கோவை
மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம்
தொடங்கப்படும்.
புதிதாக உருவாக்கப்பட உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள்
ஒவ்வொன்றிற்கும் தலா 10 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 5 ஆசிரியர் அல்லாத
பணியிடங்களும் என 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகமாக உள்ள கடலூர், காஞ்சிபுரம்,
நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7
மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெறும் வகையில்
புதிதாக ஒன்றிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
இந்த நிறுவனங்களில் 49 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 56 ஆசிரியர் அல்லாத
பணியிடங்கள் என மொத்தம் 105 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால்
அரசுக்கு ரூ.21 கோடியே 71 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும்
பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெயில் பாடப் புத்தகங்களும், பார்வை குறைபாடு
உள்ள மாணவர்களுக்கு உரு பெருக்கப்பட்ட அச்சு பாடப்புத்தகங்களும்
வழங்கப்படும்.
கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்படும்
மாவட்டங்களில் தனி விழிப்புணர்வும், பாலினம் சார்ந்த விழிப்புணர்வும்
ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.9 கோடி செலவிடப்படும்.
இந்த நிதியாண்டில் (2015-16) கோவை, மதுரை மாவட்டங்களில் புதிதாக 2 ஆசிரியர்
இல்லங்கள் அமைக்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவு
ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...