பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான, கேம்பஸ் இன்டர்வியூ துவங்கியுள்ளது. இதில், 50 ஐ.டி., நிறுவனங்கள் பங்கு பெற்று, ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை, சம்பளம் தர முன்வந்துள்ளன.அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., - வி.ஐ.டி., - பி.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைகளில், நடப்பு கல்வி ஆண்டின் வளாக நேர்காணல் தேர்வு துவங்கியுள்ளது.
இந்த ஆண்டு, ஐ.டி., நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகின்றனர்.மைக்ரோசாப்ட் இந்தியா, டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஐ.பி.எம்., - எச்.சி.எல்., அமேசான் இந்தியா உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்கள், அண்ணா பல்கலையிலும், மற்ற சுயநிதி பல்கலைகளிலும், தேர்வு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.இதுகுறித்து, நேஷனல் எச்.ஆர்.டி., கூட்டமைப்பின், சென்னை மண்டல தலைவர் சுஜித்குமார் கூறியதாவது:தற்போது ஐ.டி., நிறுவனங்கள், மற்ற தொழில் துறை நிறுவனங்களிலும், முக்கிய இடத்தை பெற்று விட்டதால், ஐ.டி., துறையில் ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.டெக்., முடிக்க உள்ள திறமையான பட்டதாரிகளை, நல்ல சம்பளத்தில் நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. இதை பயன்படுத்துவது மாணவர்கள் கையில் தான் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்
.அண்ணா பல்கலையின், தொழில் துறை-பல்கலை கூட்டு மையத்தின், பணி நியமன பிரிவுஇயக்குனர் பேராசிரியர் தியாகராஜன் கூறும்போது, ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள், அண்ணா பல்கலையில், வளாகத் தேர்வை நடத்துகின்றன. தகுதியான மாணவர்களுக்கு உடனுக்குடன் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படுகிறது, என்றார்.இந்த ஆண்டு வளாகத் தேர்வில் குறைந்தபட்சம், மூன்று லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரை, சம்பளம் தர நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால், கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி., முடித்த மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அடிப்படை சம்பளம்:
ஐ.டி., நிறுவனங்களில், கடந்த ஆண்டு வரை நுழைவு நிலையில், சாதாரண மாணவருக்கு, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் என்று தான் பேசப்பட்டது. இந்த ஆண்டு சம்பள நிலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை பணி நியமன பிரிவு முதல்வர் கணபதி கூறும்போது, ஐ.டி., நிறுவனங்களின் நுழைவு நிலை சம்பளத்தை வைத்தே, அதிகபட்ச சம்பளமும் நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டு, 10 - 15 சதவீதம் வரை, நுழைவு நிலை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கள் பல்கலையில், இந்த ஆண்டு முகாமில், ஒரேநாளில், 288 பேருக்கு, 15 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு, பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் அதிக அளவுக்கு ஆட்களை தேர்வு செய்யும், கோர் நிறுவன முகாம், செப்.,15ம் தேதி முதல் நடக்கவுள்ளது, என்றார். அண்ணா பல்கலை நிலவரம்: கடந்த ஓர் ஆண்டில் வளாக நேர்காணல் மூலம், 2,900 இன்ஜி., மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில், பணி நியமனம் நடந்துள்ளது. இதில், சில மாணவர்களுக்கு அதிகபட்சம், ஆண்டுக்கு, 35 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள், 600 பேர் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...