முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
சார்நிலை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மதுரையில் மூன்று கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், கோயம்புத்தூரில் இரண்டு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள்,மணப்பாறை, அருப்புக்கோட்டை மற்றும் திருமங்கலத்தில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என மொத்தம் பதிமூன்று மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வீதம் ஒன்பது குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் எனமொத்தம் 22 நீதிமன்றங்கள் 9 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை துரிதமாக முடிப்பதற்கு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது அவசியமாகிறது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் 32 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில்மாவட்ட நீதிபதி பதவித் தரத்தில், ஒரு விரைவு நீதி மன்றம் அமைக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது தேனி மாவட்டம் தேனியிலும், ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலிலும்,விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்திலும், திண்டுக்கல் மாவட்டம்,பழனியிலும், சேலம் மாவட்டம் மேட்டூரிலும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும்,வேலூர் மாவட்டம் வேலூரிலும் மற்றும் காஞ்சிபுரத்திலும் மாவட்ட நீதிபதி பதவித் தரத்தில் 10 விரைவு நீதிமன்றங்கள் 5 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து வாகனத்திற்கான புதிய அனுமதிச் சீட்டு, அனுமதிச் சீட்டு புதுப்பித்தல், வரிமேற் குறிப்பு, வரி நிலுவையில்லாச் சான்று, மறு பதிவு கோப்புகளுக்கான அனுமதி, தடையில்லாச் சான்று மற்றும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு பணிகளுக்கு அப்பகுதியைச் சார்ந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை ஆகியவற்றை கணக்கில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர், சேலம் மாவட்டம் – மேட்டூர், திண்டுக்கல் மாவட்டம் – பழனி, விருதுநகர் மாவட்டம் – சிவகாசி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் –கோவில்பட்டி ஆகிய பகுதி அலுவலகங்கள் 3 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும்.
மாவட்ட தலைநகருக்கு இணையாக சில மாவட்டங்களின் இதர பகுதிகளிலும், மக்கள் தொகை, தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை ஆகியன பெருமளவில் அதிகரித்துள்ளன. அப்பகுதி மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், போன்ற பணிகளுக்கு சுமார் 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை தூரம் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவல கங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் காலவிரயத்தை தவிர்த்து பொதுமக்களும், வாகனஉரிமையாளர்களும் பல்வேறு சேவைகளை உடனுக்குடன் பெறும் வகையில் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் திண்டுக்கல் மாவட்டம் –நத்தம், புதுக்கோட்டை மாவட்டம் –ஆலங்குடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் –திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில்புதிய பகுதி அலுவலகங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...