Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்


தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்

    தமிழகம் முழுவதும் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட். சேர்ந்து படிக்க 1,777 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த பட்டதாரிகள் சேர்ந்து படிக்க கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.  
       கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனையானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் விண்ணப்பங்களை வாங்கிய பட்டதாரிகள் விண்ணப்பங்களை நேற்று ஆர்வமுடன் அனுப்பினார்கள். 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு பி.எட். கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகள் என மொத்தம் 21 பி.எட். கல்லூரிகள் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில், 9 மகளிர் பி.எட். கல்லூரிகள், 4 ஆண்கள் பி.எட். கல்லூரிகள், 8 இரு பாலரும் படிக்கக்கூடிய பி.எட். கல்லூரிகளும் அடங்கும்.

இதில் மொத்தம் 1,777 இடங்கள் உள்ளன. இதில் ஆண்களுக்கு 717 இடங்களும், பெண்களுக்கு 1,060 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 990 விண்ணப்பங்கள் விற்பனையானதில், சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. நாளை தான் (அதாவது இன்று) சரியான எண்ணிக்கை தெரிய வரும்.

கலந்தாய்வு குறித்து வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் அழைப்புக்கடிதம் மற்றும் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என இரு நேரங்களிலும் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

கடந்த ஆண்டு வரை பி.எட். படிப்பின் காலம் ஒரு ஆண்டாக இருந்தது. ஆனால் இந்த வருடம் முதல் 2 ஆண்டுகளாக படிப்பின் காலத்தை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில தனியார் பி.எட். கல்லூரிகள் 2 வருடமாக மாற்றக்கூடாது என நீதிமன்றத்தை நாடியுள்ளன.

ஆனால் தற்போது 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி) விதிமுறைப்படி தயார்செய்யப்பட்டுள்ளது. அதே போல், ஆசிரியர் பயிற்சியை 100 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive