தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம்
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேர்வையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், ''கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்ததப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.
நடுநிலைப் பள்ளி ஒன்றுக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என, 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 11 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
கடந்த 4 ஆண்டுகளில் 2,798 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் . மேலும், 287 பள்ளிகளின் வகுப்பறைகள் பழுது சரி பார்க்கப்படும். இதனால் அரசுக்கு 56 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சிகளை அளிக்கும் பொருட்டும், பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா ஒரு புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் .
புதிதாக உருவாக்கப்படவுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 10 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும் 5 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் என மொத்தம் 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெற உதவும் வகையில் இந்த 7 மாவட்டங்களில் புதிய ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்தொடங்கப்படும்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள ஏழு ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 49 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள் 56 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 105 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு 21 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.
மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள வழிவகை செய்து கொடுக்கும் பொருட்டு இந்தியாவிலேயே முன்னோடியாக, தமிழகத்தில் மாநில ஆதார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு ப்ரெயில் பாடப் புத்தகங்களும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உருப் பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்.
சமூக திரட்டு திட்டம்
சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்புக் கல்வி ஆண்டிலும் சமூக திரட்டு திட்டம் செயல்படுத்தப்படும். கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்கள் மற்றும் சிறப்பு குவிமைய மாவட்டங்களில் தனி விழிப்புணர்வும், பாலின கூர் உணர்வு விழிப்புணர்வும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் அரசுக்கு 9 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
ஆசிரியர் இல்லம்
ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சியில் புதிதாக ஓர் ஆசிரியர் இல்லம் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும், ஆசிரியர் இல்லம் 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 2015-16ஆம் ஆண்டில் கோயம்பத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் புதியதாக இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் அரசுக்கு கூடுதலாக 6 கோடி இðட்ய் செலவினம் ஏற்படும்.
வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு
1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர்.
ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து வரும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுப் பணியில் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மட்டும் அரசுத் தகவல் மையத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாசிரியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கினை மாநில கணக்காயர் அலுவலகத்தில், பராமரிக்க வேண்டுமென்று அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.3.2003-க்கு முன்னர் பணி நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து நடப்புக் கல்வி ஆண்டு முதல் மாநிலக் கணக்காயர் அவர்களின் பராமரிப்பில் கொண்டு வரப்படும். இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவர் .
தமிழ்நாடு பாடநூல் கழக கிடங்குகள் கணினி மயம்
மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தரமானதாகவும், குறித்த காலத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் கொள்முதல் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட ஏதுவாக 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் பொருட்டு சென்னை, காஞ்சிபுரம், வேலூர், பர்கூர், தஞ்சாவூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள் கழகத்தின் கிடங்குகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தி கணினி மயமாக்கப்படும் .
2010-11 மற்றும் 2011-12 ஆகிய இரண்டு ஆண்டுகளில் முறையே 344 மற்றும் 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளில் 896 பள்ளிகளுக்கு மட்டும் கட்டடங்கள் கட்டுவதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு 75 : 25 என்ற விகிதாசாரத்தில் 518 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி அளித்திருந்தது. ஆனால், மத்திய அரசால் ஒரு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட தொகை, போதுமானதாக இல்லாதால் அப்பள்ளி கட்டிடங்கள் இது நாள் வரை கட்டப்படாமலேயே உள்ளன.
இப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் எதிர்கால நலன் கருதி மத்திய அரசால் ஒப்பளிக்கப்பட்ட 896 பள்ளி கட்டிடங்களை கட்டி முடிக்க மாநில அரசின் 25ரூ பங்களிப்பான 129 கோடியே 54 லட்சம் ரூபாயுடன் கூடுதலாக 996 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் மத்திய அரசால் பள்ளிக் கட்டிடம் கட்ட நிதி உதவி வழங்கப்படாத 158 பள்ளிகள் 2011-12 ஆம் ஆண்டிலேயே தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் அம்மாணவர்களின் வருங்காலம் கருதியும் மாநில அரசின் நிதியிலிருந்து, விடுபட்ட 158 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கும், 267 கோடியே 53 லட்சம் ரூபாய் வழங்கப்படும் .
ஆக மொத்தம் 2010-11 மற்றும் 2011-12ல் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...