தமிழகத்தில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், நடப்பாண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்றுஅறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது:
இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சிறு கடன்கள் வழங்குவதற்காக 58 கோடி ரூபாய் அமுத சுரபி நிதியாக நடப்பாண்டில் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.ஒரு பகுதியில் ஒரே வகை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுய உதவிக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழில் குழுவிற்கும் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள், அங்காடி வசதிகள் மற்றும் தனித் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதற்காக ஊக்க நிதி வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில் கிராமப்புறங்களில் ஒரே தொழிலை மேற்கொள்ளும் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட குழுவிற்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 1500 ஒத்த தொழில்குழுக்களுக்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வகையில் 600 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடி ரூபாய் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறிய தொழில்களை தொடங்கி வாழ்வாதாரம் பெற வழி வகுக்கும்.மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடன் சுய உதவிக் குழுக்களை தமிழக அரசு 1991-ஆம் ஆண்டு உருவாக்கியது. ஆண்டு தோறும் புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதுவரை சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இல்லாத ஆதரவற்றோர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர்களைக் கொண்டு 10,000 சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்த ஆண்டு அமைக்கப்படும். இந்த சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுமேற்கொள்ளும்.சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதன் வாயிலாக பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கடன் சுமைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படுகிறது.மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு 20,270 கோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது .இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு பயிற்சி 178 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் 12 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளில் மத்திய அரசின் 75 சதவீத பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 96 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் தமிழ்நாடு நகர்ப்புற, வாழ்வாதார இயக்கம் மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படுகிறது.ஊரகப் பகுதிகளில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏழை மகளிரை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தினை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தமிழ்நாடுமகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டு முதல் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சில கூறுகளான சமூக திரட்டு மற்றும் சமுதாய நிறுவன மேம்பாடு, திறன் வளர்ப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சிகள் மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் ஆகிய செயல்பாடுகள் தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 178 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...