தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி
பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின்
ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு
தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன.
அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை
பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை கணித அறிவை
பெருக்குவதற்காக தமிழக அரசு கணித உபகரண பெட்டி பயிற்சி (maths kids box
training) என்ற பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த பயிற்சியின் மூலம்,
கணிதத்தின் அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை
எளிமையாக கற்றல், கற்பித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பணிபுரியும் அரசு
மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார
வள மையங்களில் கடந்த 10, 11, 14ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும், 15, 16,
18ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பயிற்சி முடித்த ஆசிரியர்கள் மீண்டும் தங்கள் வகுப்புகளுக்கு
திரும்பி மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டி பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து கற்பிக்க கணித உபகரண
பெட்டி தேவை. ஆனால், இந்த கணித உபகரண பெட்டிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கணித உபகரண பெட்டிகள் வழங்கப்படவில்லை.
இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உரிய கணித
பயிற்சி கிடைக்காமல் கணித பாடங்களை கற்பதில் திணறி வருகின்றனர். இதற்காக
பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “கணித உபகரண பெட்டி பயிற்சி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை
பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கணித உபகரண பெட்டி அரசு
பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
வழங்கப்படாததால், அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி
வீண்தான். அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கணித உபகரண பெட்டி இல்லாமல்
வெறும் பயிற்சியை வைத்து அந்த ஆசிரியர்களால் என்ன செய்ய முடியும்.
இந்த பயிற்சியானது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் காலக்கட்டத்தில்
அவசர கதியில் நடத்தியிருக்கிறார்கள். இதற்கான காரணமும் தெரியவில்லை”
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...