கூகுள் தேடிய பொக்கிஷம் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனம் அதனை சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. அதன்
முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையை தலைமை
செயல் அதிகாரியாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே அந்த பதவியில், கூகுளின்
நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள்
நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ்
பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த
சுந்தர், புதியதை உருவாக்குவதில் வல்லவர். 'இன்னொரு பிரவுஸர் தேவையா?’
என்று கேள்விகளுக்கு மத்தியில், கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி
வியக்கவைத்தவர்.
இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில்
இருக்கிறது க்ரோம். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில்
இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச்
சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை.
மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக
முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத்
தக்கவைத்தது கூகுள்!
1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில்
தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்
மேற்படிப்பும், வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம்
ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக
நியமிக்கப்பட்டார் சுந்தர்.
கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச்
சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார்.
ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி
அளப்பறியது.
கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும்
ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. மிகப்பெரிய
தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள் இரண்டிலுமே தற்போது சிஇஓ
பதவியை வகிப்பது இந்தியர்கள்தான். உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட,
கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...