பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி
மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே,
பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்து உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மத்திய, மாநில
அரசுகள் சார்பில், பலவிதமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசின்
கல்வி உதவித்தொகை பெற, பள்ளி, கல்லுாரிகள் மூலமும், மத்திய அரசின்
உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமும் விண்ணப்பிக்க
வேண்டும்.
'இன்ஜினியரிங் மற்றும் கலை கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை
பெற்றுத் தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்லுாரிகளை, பல்கலைக்
கழக மானியக்குழுவான - யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.ஆனாலும், 'கல்வி
உதவித்தொகை பெற, பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பங்களே அளிக்கவில்லை' என,
பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரி யர்கள் சிலர் கூறியதாவது:
கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், பெற்றோரின் வருமான சான்றிதழை,
மாணவர்கள் வாங்க வேண்டும். ஆனால், வருமான சான்றிதழ் வழங்க, வட்டாட்சியர்
அலுவலகங்களில், நாள் கணக்கில் இழுத்தடிக்கின்றனர். பொது மின்னணு சேவை
மையங்களுக்கு சென்றால், 'தினமும், எட்டு பேருக்கு மேல் சான்றிதழுக்கு
விண்ணப்பிக்க வழியில்லை' என்று திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால், அலைக்கழிப்புக்கு ஆளாகும் மாணவர்கள், கல்வி உதவித்தொகையே வேண்டாம்
என, விண்ணப்பமே அளிப்பதில்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறையும், உயர்கல்வித்
துறையும், இந்த பிரச்னையில் தலையிட்டு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலேயே,
வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது போன்று, வருமான சான்றிதழ் வழங்கும் சிறப்பு
முகாம்களை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...