கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளைஞர், தேசிய திறந்தநிலை
பல்கலை தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம்
வென்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர், அஜித்
குமார், 23. தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர், நிலத்தகராறில், பக்கத்து
வீட்டுக்காரரை கொலை செய்து விட்டார். வழக்கை விசாரித்த கோர்ட்,
அஜித்துக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது; வாரணாசி சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.ஆத்திரத்தில் கொலை செய்ததால், சிறை தண்டனை அனுபவிப்பதை
எண்ணி வருந்திய அஜித், வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என, நினைத்தார்.
இதையடுத்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், மனித உரிமைகள்,
பேரிடர் மேலாண்மை, என்.ஜி.ஓ., மேலாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகிய
துறைகளில், பட்டயப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து, சுற்றுலா துறைச் சார்ந்த பட்டயப் படிப்பில், தேசிய அளவில்
முதல் மதிப்பெண் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பனாரஸ் இந்து
பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அஜித்துக்கு, பல்கலையின் சார்பில்,
பட்டயச் சான்றிதழ், பாராட்டு பத்திரம் மற்றும் தங்கப் பதக்கம்
வழங்கப்பட்டன.
இதுகுறித்து, அஜித் குமார் கூறியதாவது:நான் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தாலும், நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உடையவன்.
சிறை கைதிகளுக்கு, கல்வி மிக அவசியம். அதன் மூலம் மட்டுமே அவர்களின்
வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...