நாடு
முழுவதும், வீட்டு வேலை செய்யும், மூன்று கோடி பேரின் அடிப்படை உரிமைகளை
பாதுகாக்கும் வகையில், தேசிய அளவிலான கொள்கை வகுக்க, மத்திய தொழிலாளர்
நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் படி, வீட்டு வேலைக்கு ஆட்களை
அமர்த்தும் போது, சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள்
கட்டாயமாகியுள்ளன.
இப்போதுள்ள நடைமுறைப்படி, வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது பின்பற்றப்படும் சாதாரண நடைமுறைகள், விரைவில் காலாவதியாக உள்ளன. வீட்டு வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம்.
இதற்காக மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ள புதிய திட்டம் குறித்த முன்னோட்டம்:
* வீட்டு வேலைக்கு ஆட்களை எடுக்க, அரசு ஒப்புதலுடன், 'பிளேஸ்மென்ட் ஏஜன்சி' எனப்படும் வேலை அளிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். அதில், வேலை கோருபவர்களும், வேலைக்கு ஆட்களை தேடுபவர்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
* பிளேஸ்மென்ட் அமைப்பை புறக்கணித்து, தங்கள் இஷ்டத்திற்கு வீட்டில் வேலைக்கு ஆட்களை அமர்த்தினால், அத்தகைய நடவடிக்கை கொத்தடிமை நடவடிக்கையாகக் கருதப்பட்டு, வேலைக்கு அமர்த்தியவர் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும்.
* வேலை பார்க்கும் இடத்தில் சுமுக சூழ்நிலை, வார விடுமுறை, ஆண்டுக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுமுறை, மகப்பேறு விடுமுறை போன்றவை வழங்கப்படுவது கட்டாயம்.
* வேலைக்கு அமர்த்தும் முன், வேலைக்கு வருபவரும், வேலை அளிப்பவரும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், பிளேஸ்மென்ட் அமைப்பு, மூன்றாம் தரப்பாக கையொப்பமிட வேண்டும்.
* வேலை நேரம், வேலையின் தன்மை குறித்து, அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். அதில், தொழிற்சங்கத்தின் இரண்டு பிரதிநிதிகளும் சாட்சியாக கையெழுத்திட வேண்டும்.
* வீட்டிலேயே தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு, தங்கும் இட வசதி அளிக்க வேண்டும்.
* வேலை அளிப்பவர், அரசு ஊழியராக இருந்தால், வேலைக்கு அமர்த்துபவருக்கு உணவு வழங்க வேண்டும்.
* பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., எனப்படும், தொழிலாளர் காப்பீடு
நிறுவன மருத்துவ வசதி போன்றவையும் வீடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, பல அம்சங்கள், புதிய சட்டத்தில் கொண்டு வரப்பட உள்ளன.
இப்போதுள்ள நடைமுறை: * தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம், பெண்கள், சிறார்கள், முதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
* சமூக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவது இல்லை.
* வீட்டு வேலை பார்ப்பவர்களை, தொழிலாளர்களாகவே பெரும்பாலானோர் மதிப்பதில்லை. அதிகமாக வேலை வாங்குவது, குறைவாக சம்பளம் வழங்குவது போன்ற நடைமுறைகள் உள்ளன.
* இஷ்டத்திற்கு வரச் சொல்வது; தேவையில்லை என கருதும் போது, முன்னறிவிப்பு இல்லாமல் வெளியேற்றுவது.
* சம்பளத்தை முறையாக அளிப்பதில்லை.
* விடுமுறை அளிப்பதில்லை.
* பிற சலுகைகள் அறவே அளிப்பது கிடையாது.
* மருத்துவ உதவி போன்றவை வழங்கப்படுவது இல்லை.
* ஒப்பந்தம் போடப்படுவது இல்லை.
* மத்திய, மாநில அரசுகளும் கண்டுகொள்ளாத நிலை காணப்படுகிறது.
எனினும், சில வீடுகளில், வீட்டு வேலையாட்கள், மனிதாபிமானமான முறையில் நடத்தப்படுகின்றனர். ஒழுங்கான சம்பளம் மற்றும் படிகள், சலுகைகள், மருத்துவ வசதி, வாரிசுகளுக்கு கல்வி உதவி, குறிப்பிட்ட நேரமே பணி என, ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதும் உண்டு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...