வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கோவை வருவதற்குப் பதிலாக
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்ற முசிறியைச் சேர்ந்த மாணவி,
சிலரின் உதவியால் அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்து கலந்தாய்வில்
பங்கேற்றார்.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த தங்கப்பொண்ணுவின் மகள் சுவாதி. பிளஸ் 2-வில் அறிவியல் பாடம் படித்த சுவாதி, பொதுத் தேர்வில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில், கால்நடைகளை வளர்த்து அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு சுவாதியை, தாய் தங்கப்பொண்ணு படிக்க வைத்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கு 195 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற இவருக்கு மருத்துவமும், கால்நடை மருத்துவப் படிப்பிலும் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புக்காக சுவாதி விண்ணப்பித்திருந்தார்.
கோவை வேளாண் பல்கலை.யில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், சுவாதியை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வரும்படி, வேளாண் பல்கலைக்கழகம் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவித்திருந்தது.
பல்கலைக்கழக அண்ணா அரங்கில் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அண்ணா அரங்கு சென்னையில் உள்ளது என்று தோழி ஒருவர் தவறுதலாக கூறியதன்பேரில், மாணவி சுவாதி, தாயார் தங்கப்பொண்ணுவுடன் திருச்சியில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சனிக்கிழமை காலை சென்றார்.
அங்கு, அண்ணா பல்கலை. அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது தான், அவர்கள் கோவை செல்வதற்குப் பதிலாக சென்னைக்கு வந்ததை உணர்ந்தனர்.
இதையடுத்து, செய்வதறியாது சுவாதி, அவரது தாய் தங்கப்பொண்ணு இருவரும் தவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், உடனடியாக வேளாண் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் உடனடியாக சுவாதிக்கும், அவரது தாய் தங்கப்பொண்ணுக்கும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து சென்னையில் இருந்து கோவைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சுவாதிக்கு உதவும் நோக்கில் பல்கலைக்கழகப் பதிவாளர் சி.ஆர்.அனந்தகுமார், கோவை விமான நிலையத்துக்கு காரை அனுப்பி வைத்துள்ளார்.
காலை 11.25 மணிக்கு, கோவை விமான நிலையம் வந்தடைந்த இருவரும் கார் மூலம் புறப்பட்டு நண்பகல் 12.15 மணிக்கு கலந்தாய்வு அரங்குக்கு வந்தனர். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற சுவாதிக்கு பல்கலைக்கழகத்திலேயே பி.எஸ்.சி. உயிரி வேதியியல் படிக்க இடம் கிடைத்தது.
தவறுதலாக இடம் மாறிச் சென்றுவிட்ட நிலையில் மனிதாபிமானம் மிக்கவர்களின் உதவியாலும், பல்கலைக்கழக அதிகாரிகளாலும் தன்னால் குறித்த நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்க முடிந்தது. இதன் மூலம் தனது கனவு நனவாகும் என்று சுவாதி தெரிவித்தார். தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட தங்கப்பொண்ணு, விமானக் கட்டணம் செலுத்திய நபரின் பெயர் தெரியவில்லை என்றும் முகவரியைக் கொடுத்தால் பணம் சம்பாதித்து அனுப்பி விடுவதாகக் கூறியும் அதை அவர் பெருந்தன்மையுடன் வேண்டாம் என்று மறுத்து விட்டதாகத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...