அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம்
ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி -
சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக்
கல்லுாரியும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், ஓமந்துாரார் தோட்ட அரசு
மருத்துவக் கல்லுாரி, 20வது மருத்துவக் கல்லுாரியாக இணைந்து உள்ளது.இந்த
கல்லுாரிகளில் உள்ள, 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்.,
இடங்களுக்கும், இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை முடிந்து, ஒதுக்கீடு
பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
அரசு அறிவித்தபடி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு
மாணவர்களுக்கான வகுப்புகள், நாளை துவங்குகின்றன. சிறந்த மருத்துவர்களாகும்
எதிர்கால கனவுகளோடு, மாணவ, மாணவியர் கல்லுாரியில் அடியெடுத்து
வைக்கின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம்:
*மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது.
மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர
வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி
இல்லை.
*மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர
வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு
வரவேண்டும்.
*மருத்துவருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
*இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது; ராகிங் புகாரில்
சிக்கினால், கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர்.இவ்வாறு மருத்துவக் கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...