உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின்
அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
பணிநியமனம் செய்யப்பட்டு, இரண்டு
ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையிலும் தகுதி காண் பருவம்
முடிக்கப்படாததால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆசிரியர்களின் தகுதி காண் பருவம் முடிப்பதற்கு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2,
கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுக்கும் 'உண்மை தன்மை
சான்றிதழ்' சமர்ப்பிக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில்,
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை, ஆசிரியர்களிடம் இருந்து பெற்று மாவட்ட கல்வி
அதிகாரிகளுக்கு அனுப்பும் பொறுப்பு தலைமையாசிரியர்களை சார்ந்தது. தகுதி
காண் பருவம் முடிந்தால் மட்டுமே, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு, பண்டிகை
முன்பணம், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற சலுகைகளை பெற
முடியும். உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதற்கு
அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதால், தகுதி இருந்தும் சலுகைகள் கிடைக்காமல்
உள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 200 ஆசிரியர்கள் உண்மை தன்மை சான்றிதழ் கிடைக்காததால்,
தகுதி காண் பருவம் முடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுப்பது மட்டுமே ஆசிரியர்கள் நிலை
என்பதால், தலைமையாசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு
அனுப்பப்பட்ட விண்ணப்பங்களின் நிலை என்ன, எப்போது கிடைக்கும், தாமதத்துக்கு
காரணம் என்ன என்று ஒன்றும் புரியாமலும், இப்பிரச்னைக்கு யாரை அணுகுவது
என்று தெரியாமலும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பணியில் சேர்ந்து, இரண்டு
ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. உண்மை தன்மை சான்றிதழ் கிடைக்காமல்
விடுப்பு கூட எடுக்கமுடியாமல் சிரமப்படுகிறோம். தலைமையாசிரியரிடம் கேட்டால்
அனுப்பிவிட்டேன் என்கிறார்.
'அதிகாரிகளிடம் நேரடியாக கேட்க வழியில்லை. அவ்வாறு, விண்ணப்பங்கள் நேரடியாக
எடுத்து சென்றாலும் தபால் போடும் இடங்களில் போட்டு செல்ல கூறுகின்றனர்.
உண்மை தன்மை சான்றிதழ் உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்'
என்றார்.மாவட்ட கல்வி
அதிகாரி (பொறுப்பு) கீதா கூறுகையில், ''தகுதி காண் பருவத்திற்கான உண்மை
தன்மை சான்றிதழ் விண்ணப்பங்கள் பெற்றதும் சென்னைக்கு அனுப்பிவிடுவோம்.
படிப்பை முடித்து பல ஆண்டுகள் கடந்து விட்டதால், உண்மை தன்மை பெறுவதில்
சற்று காலதாமதம் ஏற்படும். உண்மை தன்மை சான்றிதழ் வரவர, சம்பந்தப்பட்ட
ஆசிரியர்களுக்கு வழங்கிவிடுவோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...