ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில்
வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில்,
பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட
ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள்
இல்லாமல் பெயரளவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு
கலையாசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில்
புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதன் படி, இரண்டு கட்டமாக
நடந்த பாடத்திட்ட தயாரிப்பு பணிமனை இரு நாட்களுக்கு முன், நிறைவு பெற்றது.
சென்னை கவின் கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆலோசனை படி, அரசு அரசு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் இப்பணி நிறைவு
பெற்றுள்ளது.ஓவியத்தை பொறுத்த வரை, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புள்ளி,
கோடு, வடிவம், அமைப்பது தொடர்பான பாடத்திட்டமும், ஏழு மற்றும் எட்டாம்
வகுப்பு மாணவர்களுக்கு கற்பனை ஓவியம், ஒன்பதாம் வகுப்புக்கு காகிதங்களை
கொண்டு வெட்டி ஒட்டுதல், சோப்பு கட்டிங் தயாரித்தல், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு வரலாற்று ஓவியங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள்
ஆகியவையும் பாடத்திட்டமாக உள்ளது. அதே போன்று, இசை, தையல், உடற்கல்விக்கு
பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க
மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கலை பாடங்களுக்கு தற்போது புதிய
பாடத்திட்டங்கள் வடிவமைத்து, உயிரோட்டம் அளித்துள்ளனர். இதுவரை, பள்ளிகளில்
பெயரளவில் செயல்பட்டு வந்த பிரிவுகள் முறையாக நடக்கும். மேலும், ஓவிய
பாடத்துக்கு சமச்சீர் பாடத்திட்டத்தின்படி கிரேடு முறையில் மதிப்பெண்
வழங்கப்படவுள்ளது. இம்மதிப்பெண், மாணவர்களின் ஒவ்வொரு மாத ரிப்போர்ட்
கார்டிலும் இடம்பெறும். நடப்பு கல்வியாண்டில், பாடத்திட்டம்
வெளியிடப்படவுள்ளதாக தெரிகிறது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...