அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், அந்தந்த பகுதி சார்ந்த
வழிபாட்டுத் தல நிகழ்ச்சிகள், பண்டிகை காலங்களில், உள்ளூர் அமைப்புகள்
சார்பில், பொருட்காட்சி நடத்தப்படுகிறது. பொருட்காட்சியில், குழந்தைகளை
கவரும் வகையில், ராட்டினம் உட்பட, பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்
பெறுகின்றன. கடந்த மாதம், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தில்,
சொக்கநாதர் கோவில் விழாவை யொட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
பொருட்காட்சி அமைக்கப்பட்டது; அதில், ராட்டினங்களும் இடம் பெற்றன.
திடீரென
ராட்டினம் உடைந்து, 12 வயது மாணவன் ஒருவன் படுகாயம் அடைந்து பலியானான்;
இரண்டு பேர் காயம் அடைந்தனர்.இதுகுறித்து, விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்
துறை அதிகாரிகள், பள்ளி வளாகங்களில் பொருட்காட்சி நடத்த தடை
விதித்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள
உத்தரவு:பள்ளி வளாகங்களில், ராட்சத ராட்டினம் போன்ற சாதனங்களால், திடீரென
விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவியர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதாக
புகார்கள் வந்துள்ளன. எனவே, வருங்காலங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளி வளாகங்களில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான, பொருட்காட்சி
அல்லது இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது.
இதுகுறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி
அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...