பொள்ளாச்சி:
அரசுப்பள்ளி வளாகங்கள் விடுமுறை நாட்களில், 'பார்'ஆகவும், திறந்த வெளி
கழிப்பிடமாகவும் மாறி வருகின்றன. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த,
அனைவரும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும்
எழுந்துள்ளது.
கல்வி அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக விலையில்லா புத்தகம், பேக்குகள் உள்ளிட்ட அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளிகளில் கற்பிக்கும் முறையில் புதிய முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில், போதுமான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
'கோவிலாக' போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பள்ளி வளாகம், தற்போது, சமூக விரோதிகளின் செயல்களினால், 'பார்' ஆகவும், கழிப்பிடமாகவும் மாறியுள்ளது கல்வி ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில், விடுமுறை நாட்கள் யாரும் வராத சூழலை பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் சிலர், வளாகத்தை 'பார்' ஆக மாற்றி விடுகின்றனர்.
பள்ளிக்குள் அமர்ந்து கூட்டமாக குடிக்கும் 'குடி'மகன்கள் மதுபான பாட்டில்களை உடைத்து, வளாகத்தில் பிஞ்சு குழந்தைகள் நடந்து வரும் பாதையில் வீசிச் செல்கின்றனர். குடிக்க பயன்படுத்திய பொருட்களை கண்ட இடங்களில் வீசுகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில், என்ன செய்கிறோம் என்பதை மறந்து போகும் 'குடி'மகன்கள் குழந்தைகள் படிக்க வேண்டிய வகுப்பறைகளையும், ஓடி ஆடி விளையாடும் மைதானத்தையும் கழிப்பிடமாக பயன்படுத்தி அசுத்தம் செய்து விடுகின்றனர்.
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கை வண்ணத்தால், குடிநீர் குழாய் உடைப்பு, வகுப்பறை சேதம் மற்றும் மதுபான பாட்டில்கள் உடைப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதே தலையாய கடமையாக மாறியுள்ளது.
குடித்து வீசப்பட்ட பொருட்களையும், அசுத்தம் செய்து வைத்ததை அப்புறப்படுத்துவதற்குள் குழந்தைகளும், ஆசிரியர்களும் படும் பாடு சொல்வதற்கு வார்த்தைகளில்லை. எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அதன் நோக்கமே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை கண்கூடாக காணும் பெற்றோர்களும், உள்ளாட்சி நிர்வாகங்களும் இதன் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே இந்த நிலை மாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள ராமபட்டிணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 180 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி விடுமுறை நாட்களில், பள்ளிக்குள் அத்துமீறி நுழையும் சிலர், மதுபான பாட்டில்களை உடைத்து வீசிச் செல்லுதல், கழிப்பிடமாக பயன்படுத்துதல் போன்ற செயல்களிலும், மாணவர்கள் படிக்க வேண்டிய வகுப்பறை சுவர்களில், ஆபாசமாக படங்களை வரைந்து வைத்து செல்வதும் தொடர்கதையாகி வருவதால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முகம் சுளித்தபடியே செல்லும் நிலை நிலவியது.
இதனால், ஆவேசமடைந்த மாணவர்கள் பள்ளி முடிந்ததும் பள்ளிக்குள் அமர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
'படிக்க வேண்டிய இடம் இப்படி மாறினா... நாங்க எங்கே போய் கல்வி கற்பது?,' என்ற பிஞ்சுகளின் வார்த்தைகளுக்கு பதில் யாரிடமும் இல்லை. அங்கு வந்த போலீசார் பாதுகாப்பு தரப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இதுபோன்று, மண்ணூர் பள்ளி வளாகத்தையும் சமூக விரோதிகள் அசுத்தம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தேவை நடவடிக்கை தான். தேவையற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...