மதுரை, ஆக. 3–விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர்,
மதுரைஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி
இருப்பதாவது:–நான், ராஜபாளையம் புனல்வெளியில் உள்ள அரசு உதவி பெறும்
பள்ளியான முருகன் ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தேன்.
பள்ளியை நிர்வகிப்பது சம்பந்தமான பிரச்சினையில் அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் நேரடியாக சம்பளம் வழங்கப்படுகிறது.பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது, விடுமுறை அனுமதிப்பது, வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பது போன்ற சில அதிகாரங்களை மட்டும் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் அளித்துள்ளார்.
இதைதவிர, பள்ளி கமிட்டிக்கு அளிக்கப்பட்டு உள்ள அதிகாரங்களில் கல்வி அதிகாரிகள் தலையிட முடியாது. இந்தநிலையில், நான் பணியாற்றி வரும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறி என்னை மீனாட்சிபுரத்தில் உள்ள காமராஜர் தொடக்கப் பள்ளிக்கு மாற்றி 22.7.2015 அன்று விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.என்னை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. நான், பணியாற்றி வரும் பள்ளியில் இருந்து என்னை விடுவிக்க பள்ளி கமிட்டிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் நான் பணியாற்றி வரும் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் தான் பணியாற்றி வருகின்றனர்.கூடுதல் ஆசிரியர்கள் பணியில் இல்லை. அதே போன்று, நான் பணியாற்றி வரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனர். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி எந்திரத்தனமாக, என்னை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
எனவே, என்னை வேறு பள்ளிக்கு மாற்றி 22.7.2015 அன்று விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கே.கே.கண்ணன், ‘அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பள்ளிக்கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது‘ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரை வேறு பள்ளிக்கு மாற்றி தொடக்கக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தொடக்கக்கல்வித்துறை இயக்குனர், விருதுநகர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...