அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் மாணவியர்
விடுதிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், பிளஸ் 2 வரை படித்த பெண்களே
வார்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், தலா, 100 மாணவியர்
தங்கியிருக்கும் விடுதியில், அதில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல்
திணறும் நிலை உள்ளது.
கோரிக்கை:ஆசிரியர் கல்வித்தகுதியில், காலமுறை ஊதியத்தில், வார்டன்
நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் கல்வியில்
பின்தங்கிய மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, 44 ஒன்றியங்களில், 9, 10ம்
வகுப்பு படிக்கும் மாணவியருக்கான விடுதிகள், கடந்த ஆண்டில் துவங்கப்பட்டது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் இவ்விடுதிகளில், அரசு
மற்றும் மாதிரிப்பள்ளிகளில் படிக்கும் மாணவியரில், 100 பேர்
தங்கிப்படிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.இதில், 15வயது முதல், 17 வயது வரையிலான மாணவியர்
தங்கியிருப்பதால், நித்தம் நித்தம் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. காதல்
பிரச்னையில் துவங்கி, ரோமியோக்களின் ஈவ் டீசிங் வரை, மாணவியரின் மனநிலையை
பாதிக்கின்றன.
இவ்விடுதிகளில், வார்டனாக, பிளஸ் 2 வரை படித்துள்ள பெண் ஒருவர்,
தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 100 பெண்களையும்
கவனித்து, அவர்களின் மனநிலை மாற்றம், பிரச்னைகள் ஆகியவற்றை தீர்த்து
வைக்கும் தகுதியில்லாததால், கடும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். ஆசிரியர்
கல்வித்தகுதியில், வார்டன் நியமிப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளையும்
பலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு மாணவியர் விடுதியில், பொதுவாக
கூலி வேலைக்கு வெளியூருக்கு செல்வோரும், ஆதரவற்ற குழந்தைகளுமே, தங்கி
படிக்கின்றனர்.
வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவியர், 100 பேரை, தங்க வைத்து
பார்த்துக்கொள்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இடைநிலைக்
கல்வித்திட்டத்தில் செயல்படும் இவ்விடுதிகளில், ஆசிரியர் கல்வித்தகுதியில்
வார்டனை நியமிக்க வேண்டும் என்றே, மத்திய அரசும் வலியுறுத்தி உள்ளது.
தொகுப்பூதியம்:தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் பெண்களை,
மாணவியரும் பெரிதாக மதிப்பதில்லை. அவர்களால், பிரச்னைகளையும் சமாளிக்க
முடிவதில்லை. தொகுப்பூதியம் என்பதால், தன் பணி குறித்த கவலையின்றி,
பொறுப்புகளுக்கு உள்ளாவதில்லை.
மேலும் வேலையை விட்டு, அவர்கள் சென்றுவிடுவதாலும், அடிக்கடி வேறு
வார்டன் மாறுவதாலும், மாணவியரிடம் வார்டன் குறித்த அலட்சியப்போக்கு
அதிகரிக்கிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்டவை நடத்தும் விடுதிகளில் கூட,
ஆசிரியர்களே வார்டன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள்
இல்லாததால், திசை மாறும் மாணவியர் ஒரு புறம் இருக்க, கேட்க ஆள் இல்லாமல்,
விடுதி அருகில், அத்துமீறும் ரோமியோக்களின் தொல்லையும்
அதிகரிக்கிறது.மேலும், 100 மாணவியருக்கு தகுந்த வசதிகளை, ஒரு வார்டன்
கவனிப்பதும் மிகுந்த சிரமத்தை உருவாக்குகிறது. இதனால், உடல்நலக்குறைவு
ஏற்படும் பட்சத்தில், அதை உடனடியாக கவனிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
மத்திய அரசின் திட்ட நிதியில் செயல்படும் இவ்விடுதிகளில், அத்திட்டத்தில்
அறிவுறுத்திய படி, ஆசிரியர் கல்வித்தகுதியில், ஒன்றோ அல்லது அதற்கு
மேற்பட்வேரையோ வார்டனாக நியமித்து, மாணவியரை பிரச்னைகளில் இருந்து
காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...