தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறைசெப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தட்கல் ரயில் டிக்கெட்டுகள் பெரிதும் கைகொடுக்கிறது. தட்கலில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை தொடர்பாக விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முறை நடைமுறையில் உள்ளது. அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பயணிகள் கவனமாக முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில் பயணிகளுக்கு பெரிதும் கஷ்டமாக இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை சமீபத்தில் வெளியிட்டது. இதற்காக கணினியில்மென்பொருள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது, அடையாள அட்டை பதிவு தேவையில்லை என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில் பயணத்தின்போது அடையாள அட்டையை காண்பித்தாலே போதும்.6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்தாலும், அந்த குழுவில் உள்ள ஒருவர் அடையாள அட்டையை வைத்திருந்தாலே போதுமானது. இதனால், பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது நேரத்தை சேமிக்க முடியும்.
இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புதிய முறை செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என்றனர்.இது தொடர்பாக டிஆர்டியு செயல் தலைவர் ஆர். இளங் கோவனிடம் கேட்டபோது, ‘‘இந்த புதிய முறையினால் பயணிகளுக்கு சில நன்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் உண்மையானபயணிகள் பாதிக்கப்படும் வகையில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ரயில்வே துறை கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...