பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக்
கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பு பொதுச்செயலர் (பொறுப்பு) கே.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கலை,
ஓவியம், தையல், உடல்பயிற்சி, கணினி போன்ற பாடங்களை கற்பிக்க 16,549
பகுதிநேர பயிற்றுநர்களை 2012 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு
தொகுப்பூதியமாக ரூ.7,000-ஐ அரசு வழங்கி வருகிறது.
தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 100-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள
பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு இந்த
ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதாகக்
கூறப்படுகிறது.
மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி இந்த பகுதிநேர ஆசிரியர்களை
இடமாறுதல் செய்வது, கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும்.
100-க்கும் குறைவான எண்ணிக்கை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த வாழ்வியல்
திறன்கள் கிடைக்காமல் போகும்.
மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரவலில் மாறுதல்
செய்யப்பட்டால், வெகு தொலைவு செல்ல வேண்டி இருக்கும். இந்தப் பணியில்
ஆசிரியைகள் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள நிலையில், இடமாறுதல்
அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், காலியாக உள்ள இடங்களில்
புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமே தவிர இடமாறுதல் செய்யக்கூடாது என்று
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...