தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான
செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல்
நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள்,
லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,
தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச லேப் -- டாப்
வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2011 செப்., 15ல் இத்திட்டத்தை, தமிழக
முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் துவக்கி வைத்தார்.
சொத்து குவிப்பு வழக்கு:கடந்த, 2011 முதல், 2013 வரை, இத்திட்டத்தில்,
மாணவர்களுக்கு தங்கு தடையின்றி லேப் - டாப் வழங்கி முடிக்கப்பட்டது. ஆனால்,
2014ல், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கு சிறை தண்டனைக்கு பின்,
இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக, 2014 - 2015 கல்வி ஆண்டில், 50 சதவீதத்துக்கும் மேலான
மாணவ, மாணவியருக்கு, லேப் - டாப் வழங்கப்படவில்லை. இதில் சென்னையில்
பயிலும் மாணவர்களுக்கு, 90 சதவீதம் வரை, வழங்கப்பட்ட நிலையில், பிற
மாவட்டங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, 30 சதவீதம் மட்டுமே
வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்ற நிலையில், இலவச லேப் டாப்
வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, லேப் - டாப்
கொள்முதலுக்கான டெண்டர் பணி முடிந்துள்ளது. விரைவில் லேப் - டாப் வினியோகம்
செய்யப்பட உள்ளது.
இதில், லேப் - டாப் கொள்முதலில் பள்ளிக் கல்வித்துறையில் மட்டும், கடந்த,
2011 - -12ல் அரசுக்கு, 739 கோடி ரூபாய் வரை செலவான நிலையில், தற்போது,
1,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்த திட்டத்தின்
காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஆகி
உள்ளது.
உயர் கல்வித்துறையின் சார்பில் ஆண்டுக்கு, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் -
டாப் வழங்கப்படுகிறது. அந்த வகையில், அரசுக்கு ஆண்டுக்கு மேலும் கூடுதலாக,
200 கோடி ரூபாய் வரை, செலவாகி வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய இரண்டு துறைகளால் வழங்கப்படும்
இலவச லேப் - டாப்புகளால் அரசுக்கு ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வரை, கூடுதல்
செலவாகி வருகிறது.
எதிர்பார்ப்பு:கடந்த, 2014- - 15ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள், நடப்பு
2015 - -16ம் கல்வி ஆண்டில் பயின்று வரும் மாணவ, மாணவியர், அவர்களின்
பெற்றோரின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில், டிசம்பர்
மாதத்துக்குள் இலவச லேப் - டாப், வழங்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை,
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை தீவிரமாக
மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் டிசம்பருக்குள், லேப் - டாப்,
மாணவர்களை வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேலுார் முதலிடம்:இலவச லேப் - டாப் திட்டத்தில் பயன் அடையும் மாணவ,
மாணவியரின் எண்ணிக்கையில், வேலுார் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில்
உள்ளது. கடந்த 2014 - -15 கல்வி ஆண்டில், வேலுாரில், 34,772 மாணவர்கள்
பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.
சென்னை, 28,352, சேலம், 27 ,007 என, அடுத்தடுத்த இடங்களை பெற்றன. அதே நிலை
நடப்பு கல்வி ஆண்டு, 2015- - 16ல் தொடர்கிறது. ஆனால், சென்னையில் உள்ள
அனைத்து பயனாளிகளுக்கும், ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக லேப்- டாப் வழங்கி
முடிக்கப்படும் நிலையில், பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே
வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...