அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக விருப்பப் பாடத் தேர்வு முறை
(சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 2015-16
கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைத் தேர்வு
செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை
மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது. அதன்
தொடர்ச்சியாக
விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது ஒரு படிப்பின் அடிப்படைப் பாடங்களில் அல்லாமல், துணைப்
பாடங்களில் (எலக்டிவ் பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள்
மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான
கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில்
சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா
பல்கலைக்கழகத்திலோ அதன்கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளிலோ இந்த
நடைமுறை அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர்கல்வி
அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து
உயர்கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படுவதன் அவசியம்
வலியுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த நடைமுறையை பொறியியல் கல்லூரிகளிலும் அறிமுகம்
செய்வதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. பல்கலைக்கழக
கல்விக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலைத் தொடர்ந்து, அண்ணா
பல்கலைக்கழகத்தின் துறைகளில் முதல்முறையாக இந்த நடைமுறை அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி பாடத் திட்ட இயக்குநர்
டி.வி.கீதா கூறியது: யுஜிசி அறிவுறுத்தலின்படி, சி.பி.சி.எஸ். நடைமுறை
பொறியியல் பட்ட மாணவர்களுக்கு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி,
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி., கட்டடவியல் திட்டக் கல்லூரி
ஆகிய 4 கல்லூரிகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் எலக்டிவ் பாடங்கள் இரண்டைக் கைவிட்டு, வேறு துறை
அல்லது வேலைவாய்ப்புக்கு உகந்த பாடங்கள் இரண்டை கட்டாயம் தேர்வு செய்து
படித்தாக வேண்டும்.
நிகழாண்டில் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், இரண்டாம் பருவம் முதல் இந்த நடைமுறையைப் பின்பற்றுவர்.
இணைப்புக் கல்லூரிகள்: பல்கலைக்கழகத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள
இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதும், இணைப்புக் கல்லூரிகளிலும்
சி.பி.சி.எஸ். நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளிலும் 2015-16 கல்வியாண்டு முதல் சி.பி.சி.எஸ். முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் மேற்படிக் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...