'ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்
லட்சிய உறுதியேற்பு நிகழ்ச்சியை, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்
நடத்த வேண்டும்' என, கலாம் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:அப்துல் கலாம், 2.5 கோடி மாணவர்களை, இளைஞர்களை, நேரில்
சந்தித்து, லட்சிய விதையை விதைத்த ஆசிரியர். அவர்களுடன் கலந்துரையாடி,
அவர்களின் கேள்விகளுக்கு, பதில் கூறி, 'உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை
உறங்கவிடாமல் செய்வது தான் கனவு' என்ற தாரக மந்திரத்தை விதைத்தவர். அவர்
இந்த மண்ணில் புதைக்கப்பட்டு, ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதியுடன், 41
நாளாகும்.
உறுதிமொழி:எனவே, ஆசிரியர் தினத்தன்று, கலாமை மானசீக குருவாக ஏற்ற,
மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும், 'அவர் கொடுத்த உறுதிமொழிகளை,
இன்று முதல் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம்' என, உறுதிமொழி எடுக்க
வேண்டும்.
l என்
வாழ்க்கையில், மிகப்பெரிய லட்சிய விதையை விதைப்பேன்; லட்சியத்தை அடைவதற்கு,
அறிவை தேடி தேடி பெறுவேன்; கடுமையாக உழைப்பேன். விடாமுயற்சியோடு, தோல்வி
மனப்பான்மைக்கு, தோள் கொடுத்து, வெற்றி பெறுவேன்.
l நேர்மையாக உழைப்பேன்; நேர்மையாக வெற்றி பெறுவேன்.
l என்
குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும்,
உலகத்திற்கும், விழிப்புணர்ச்சி பெற்ற, அறிவார்ந்த உறுப்பினராக திகழ்வேன்.
l ஜாதி,
மதம், இனம், மொழி, நாடு என வேறுபாடின்றி, எப்போதும் யாராவது ஒருவரது
வாழ்க்கையிலாவது, மனமாற்றம் மட்டும் அல்ல, குணமாற்றத்தை ஏற்படுத்தி,
அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவேன்.
l குடிப்பழக்கம், போதைப்பழக்கம், சூதாட்டம் போன்ற வீணான பழக்க வழக்கங்களுக்கு, ஒருபோதும் அடிமையாக மாட்டேன்.
l நேரத்தின்
முக்கியத்தை மதித்து நடப்பேன். என் வாழ்வில், என்னை சிறகடித்து பறக்க
வைக்கும் நாட்களை, ஒருபோதும் வீணான செயலில் ஈடுபட்டு, வீணடிக்க மாட்டேன்.
சுத்தமான தண்ணீர்
l இந்த
பூமியில், ஐந்து மரங்களையாவது நட்டு வளர்த்து, பாதுகாத்து, பூமியை
சுத்தமானதாக, பசுமையானதாக மாற்ற பாடுபடுவேன். ஊரணிக்கு உயிர் கொடுப்பேன்;
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க பாடுபடுவேன்.
l நான்
எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், வெற்றி பெற துணிச்சலோடும், வீரத்தோடும்,
விவேகத்தோடும் உழைப்பேன்; அது மட்டுமல்ல. யார் வெற்றி அடைந்தாலும்,
வேறுபாடு கருதாமல், அவர்களின் வெற்றியை மனதார பாராட்டி மகிழ்வேன்.
l என்
நம்பிக்கைக்கு இளைஞனாகவும், என் சந்தேகத்துக்கு முதியவனாகவும் இருக்கிறேன்.
எனவே, நம்பிக்கை என்னும் அறிவு தீபத்தை, என் இதயத்தில் ஏற்றி வெற்றி
பெறுவேன்.
l என்
தேசியக் கொடியை, இதயத்தில் ஏற்றி, என் இந்திய தேசத்திற்கும், என்
தமிழகத்திற்கும், மதிப்பையும், மரியாதையையும், உலக அரங்கில் பெற்றுத்
தருவேன்.
இவ்வாறு, உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை, பள்ளியிலோ, கல்லுாரியிலோ, தாங்கள்
பணிபுரியும் நிறுவனத்திலோ, வசிக்கும் பகுதியிலோ, தெருவிலோ, அனைவரும் கூடி
எடுக்கலாம். அப்படி செய்ய இயலாதவர்கள், வீட்டில் ஒன்றாக இணைந்து, உறுதிமொழி
எடுக்கலாம்.
உறுதிமொழிகளை, www.abdulkalam.com என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். கலாமின் குடும்பத்தினர், அவரோடு பணிபுரிந்த நண்பர்கள்
சார்பில், இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.இவ்வாறு பொன்ராஜ்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...