மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக
அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில்
நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர்
லோவ் வர்மா கூறினார்.
மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்) உடையவர்களுக்கான
12-ஆவது சர்வதேச மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இதில் லோவ்
வர்மா பேசியது:
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச்
சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற
நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும்
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு
கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு
இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள்
மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் எண்ணிக்கை 19 ஆக
அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளின் இட
ஒதுக்கீடு 5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
மத்திய அரசின் "மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஒரு லட்சம்
மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த, வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய
பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம்
மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.
மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு
இரண்டு வகையான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில்
மாணவர்கள் ரூ. 30 லட்சம் வரை கல்வி உதவித்தொகை பெற முடியும். போபால்,
ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் பொது இடங்கள், கல்வி
நிறுவனங்கள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவை
மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு, பயன்படுத்துவதற்கு ஏற்றவிதமாக உள்ளதா
என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். முதல்கட்டமாக 7 நகரங்களில் ஆய்வு
மேற்கொள்ளப்படும். அதன்பின்பு 48 நகரங்கள், பெருநகரங்களில் ஆய்வு
மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச "டவுன் சின்ட்ரோம்' அமைப்பின் தலைவர் டாக்டர் சுரேகா
ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் வெனிஸா டாஸ் சான்டோஸ், மனநலக் குறைபாடு
உடையவர்களுக்கான மருத்துவ ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் சுரேஷ்
உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...