தலைக்கவசம்
அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வரும்
19-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
கூறினார்.
தலைக்கவசம்
தொடர்பான வழக்கில் முந்தைய விசாரணையின்போது, "தமிழக அரசின்
கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும், வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது'
என வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டது. பெண்கள்,
குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரி
மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது திங்கள்கிழமை (ஆக. 10) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்குக் கோரிய மனுக்கள் மீது ஆகஸ்ட் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருபாகரன் கூறினார்.
உத்தரவின் நிலை என்ன? அதன் பிறகு நீதிபதி கூறும்போது, ""கடற்கரை சாலையில் பலர் தலைக்கவசம் அணியாமல் செல்வதைப் பார்க்கிறேன். தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்கிற உத்தரவை அரசு தீவிரமாக அமல்படுத்துகிறதா?'' என்று கேட்டார்.
குறைந்த விபத்துகள்: இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படுவதாகக் கூறிய தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தார். அதில் ""தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 582-ல் இருந்து, ஜூலை மாதத்தில் 498-ஆகக் குறைந்துள்ளது.
ஜனவரி மாதம் 2,784 விபத்துகளில் 599 பேர் பலியாயினர். பிப்ரவரி மாதம் 2,476 விபத்துகளில் 481 பேர் உயிரிழந்தனர். மார்ச் மாதம் 2,542 விபத்துகளில் 572 பேரும், ஏப்ரல் மாதம் 2,362 விபத்துகளில் 543 பேரும், மே மாதம் 2,460 விபத்துகளில் 599 பேரும் உயிரிழந்தனர். ஜூன் மாதம் 2,510 விபத்துகளில் 582 பேர் உயிரிழந்த நிலையில், கட்டாய தலைக்கவச உத்தரவு அமலான ஜூலை மாதத்தில் 2,313 விபத்துகளில் 498 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...