'நாடு முழுவதும் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், ஒரே
நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு
பரிந்துரை அளித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வியை பலப்படுத்தவும், அதன் கட்டமைப்பை
மாற்றி அமைக்கவும் தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, கடந்த, காங்.,
ஆட்சியின் போது ஒரு குழு அமைக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்:
அப்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த
கபில் சிபல், இந்த குழுவை அமைத்தார். மத்திய அரசின் கல்வித்துறை முன்னாள்
செயலர் எம்.எம்.காவ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, இரண்டு
ஆண்டுகளுக்கு பின் தனது அறிக்கையை, மத்திய அரசிடம்
சமர்ப்பித்துள்ளது.இதுகுறித்து விவரங்கள், மத்திய அரசின் இணையதளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும், 11
ஆயிரத்துக்கும் அதிகமான இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்வி நிலையங்கள்
செயல்பட்டு வருகின்றன.இவற்றில் சேருவதற்கு, மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை
சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர் சேர்க்கையில், பல்வேறு நடைமுறைகள்
பின்பற்றப்படுகின்றன. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கு, ஜே.இ.இ.,
எனப்படும் தேர்வும்; மேலாண்மை படிப்புகளுக்கு, சி.எம்.ஏ.டி., என்ற தேர்வும்
நடத்தப்படுகிறது.இந்த நடைமுறை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.
சில மாநிலங்களில், இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் தனியாக நுழைவுத் தேர்வும்
நடத்தப்படுகிறது. ஒருசில மாநிலங்களில், கவுன்சிலிங் முறை மூலம் மாணவர்
சேர்க்கை நடத்தப்படுகிறது. நிகர்நிலை பல்கலை மற்றும் தனியார் கல்லுாரிகள்,
தங்களுக்கென தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இது, மாணவர்
சேர்க்கையை சிக்கலாக்குகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சில
வழிமுறைகள் உள்ளன.
ஏ.ஐ.சி.டி.இ., கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லுாரிகள் மற்றும் தனியார்
கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கு, நாடு முழுவதும் ஒரே தேர்வாக, பொது நுழைவுத் தேர்வு
நடத்தலாம்.தேசிய தேர்வு பணிகள் என்ற அமைப்பை உருவாக்கி, அதன்
கட்டுப்பாட்டின் கீழ் இந்த தேர்வை நடத்தலாம்; இது, சுதந்திரமாக செயல்படும்
அமைப்பாக இருக்க வேண்டும். தேவையானால், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற
அமைப்புகளின் உதவியை நாடலாம்.
மாற்ற வேண்டும்:
தேசிய தேர்வு பணிகள் அமைப்பை, சம்பந்தப்பட்ட கல்வி தொடர்பான உயர்ந்த
அமைப்பாக மாற்ற வேண்டும். தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தவும், அது
தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்தலாம்.
இதுபோல், மேலாண்மை படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம்.
மாணவர் சேர்க்கைக்கான, 'கவுன்சிலிங்' முடிந்த பின், மீதமிருக்கும்
சீட்டுகளை, 'மேனேஜ்மென்ட் கோட்டா' என, அறிவிக்க கூடாது. அந்த சீட்டுகளை,
காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கலாம். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
செயல்படும் 9 குழுக்கள்:
*தொழில்நுட்ப கல்வி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, 1945ல்,
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அமைக்கப்பட்டது.
*இன்ஜினியரிங், தொழில்நுட்பம், மருந்தியல், கட்டுமானம் மற்றும் நகரமைப்பு,
விடுதி மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், மேலாண்மை கல்வி, கம்ப்யூட்டர்
பயன்பாடு போன்ற பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம்,
ஏ.ஐ.சி.டி.இ.,க்கு உண்டு.
*தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்படும், ஏ.ஐ.சி.டி.இ., தொழில்நுட்ப
கல்வி தொடர்பாக திட்டமிடுதல், கட்டுப்பாடுகளை உருவாக்குதல், தர வரிசை
வழங்குதல், கண்காணிப்பு, நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.
*ஏ.ஐ.சி.டி.இ., தலைவரின் கீழ், பேராசிரியர் வளர்ச்சி, இளநிலை கல்வி,
முதுநிலைக் கல்வி, ஆராய்ச்சி, தர உறுதி, திட்டமிடல் மற்றும்
ஒருங்கிணைத்தல், ஆய்வு மற்றும் நிறுவன வளர்ச்சி, நிர்வாகம், நிதி என,
ஒன்பது குழுக்கள் செயல்படுகின்றன.
*இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு,
ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுவதை தவிர்க்க, மத்திய
அரசு விரும்புகிறது. இதுகுறித்த பரிந்துரைகளை அளிப்பதற்காகவே குழு
அமைக்கப்பட்டது.
*இந்த குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள, பொது நுழைவுத்
தேர்வுக்கும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில்
சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ.,க்கும் எந்த
தொடர்பும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...