Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி

     முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு விடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது. 

       அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், கடைகளை மூடும்படியும், வாகனங்களை நிறுத்தும்படியும், கட்சி தொண்டர்கள் வற்புறுத்துவர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, நாடு முழுவதும், மக்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.இன்று, அவரது இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி, அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது.இன்று, பள்ளிகள், கல்லுாரிகள், நீதிமன்றங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எந்த நிர்பந்தமும் இல்லாமல், யார் வற்புறுத்தலும் இல்லாமல், அப்துல் கலாம் மீது கொண்ட பற்று காரணமாக, பல அமைப்புகள், இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
*'இன்று மாநிலம் முழுவதும், கடைகள் மூடப்படும்' என, வணிக அமைப்புகள் அறிவித்துள்ளன. நகைக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*'அப்துல் கலாம் மறைவுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று லாரிகள் ஓடாது' என, தமிழ்நாடு லாரி சம்மேளனத் தலைவர் சுகுமாறன் தெரிவித்துஉள்ளார்.
*அப்துல் கலாம் இறுதி சடங்கையொட்டி, காலை, 9:00 மணியில் இருந்து, மாலை 5:00 மணி வரை, பால் விற்பனை மற்றும் சப்ளை இருக்காது என, பால் முகவர்கள் அறிவித்துள்ளனர்.
* பெட்ரோல் 'பங்க்'கள், காலை, 11:00 மணி வரை மூடியிருக்கும் என, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளன.
* தமிழகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
*அப்துல் கலாம் மறைவுக்கு திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், தியேட்டர் உரிமையாளர், சங்கத்தினர் உள்ளிட்ட, திரையுலகத்தினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.'கலாமின் இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில், காலை, முதல் மாலை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்' என, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
எனினும், தமிழகம் முழுவதும், அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்; ரயில் ஓடும். 

தடையில்லா மின்சாரம்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், இறுதி சடங்கில் பங்கேற்க, இன்று, பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். மேலும், மத்திய, மாநில அமைச்சர்கள், விஞ்ஞானிகள், வெளிநாட்டு துாதர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் 
என, அனைவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் முகாமிட்டுஉள்ளனர்.எனவே, நாளை வரை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், தடையில்லா மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராமநாதபுரத்திற்கு, தடையில்லாமல் மின்சாரம் வழங்க, துாத்துக்குடியில் உள்ள என்.எல்.சி., மற்றும் மின் வாரிய அனல் மின் நிலையங்களில், முழு உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க மதுரை, துாத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து, தலா, 100 ஊழியர்கள், ராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
கூடுதல் பஸ்கள் இயக்கம்:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், சென்னை கோயம்பேட்டில் இருந்து, ராமேஸ்வரத்திற்கு, தினமும், எட்டு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.அப்துல்கலாம் இறுதி சடங்கு, இன்று, ராமேஸ்வரத்தில் நடைபெறுவதையொட்டி, நேற்று மாலை முதல், ஒரு மணி நேரத்திற்கு, ஒரு பஸ் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது.அதேபோல், தனியார் பஸ் நிறுவனங்களும், கூடுதல் பஸ்களை இயக்கின. 

சென்னையில் இன்று டீக் கடைகள் இயங்காது!'சென்னையில், அனைத்து டீக்கடைகளும், இன்று மூடப்படும்' என, சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் கடைகள் இன்று மூடப்படும் என, வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னை பெருநகர டீக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ஆனந்தன் கூறுகையில், ''அப்துல் கலாமின் மறைவு, சிறுவியாபாரிகளுக்கும் பேரிழப்பு. இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார். அந்த அறிஞரின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மாநகரில், அனைத்து டீ கடைகளும் இன்று மூடப்படும்,'' என்றார்.
ராமேஸ்வரம் எங்கும் மக்கள் கூட்டம்:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த, நாடு முழுவதும் இருந்து, முக்கிய பிரமுகர்கள், ராமேஸ்வரத்தில் குவிந்து வருகின்றனர். சாலைகள் எங்கிலும், கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்கள், பிளக்ஸ், கறுப்பு பேட்ஜ் என, தண்ணீர் தேசமான ராமேஸ்வரம், கண்ணீரில் மூழ்கியுள்ளது.ராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் வீட்டில், கடந்த, 27ம் தேதி முதல், ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். ராமேஸ்வரத்திலுள்ள அனைத்து சாலைகளிலும், ஆங்காங்கே தனிநபர் முதல், பல்வேறு அமைப்புகள் வரை, பிளக்ஸ், பேனர்கள் அமைத்து, அஞ்சலி தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில், எங்கு பார்த்தாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு, ஆங்காங்கே, கலாம் படங்களை வைத்து, அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive