பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்
தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி
இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான
பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என
தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி
இயக்ககம் அனுப்பியுள்ளது.
அதன் விவரம்:-
பள்ளி வளாகங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், பழைய கட்டட இடிபாடுகளை
அகற்றுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், பள்ளி வளாகம், கழிவறைகளைச்
சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை உரிய பணியாளர்களை நியமித்து செய்ய
வேண்டும். இந்தப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது.
அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் தலைமையாசிரியர் கூட்டங்களிலும் இது
தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிகளை பார்வையிடும்போதும், ஆண்டாய்வு
மேற்கொள்ளும்போதும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களே 100 சதவீதம் பொறுப்பு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்படுவது எதிர்காலத்தில்
கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மீது
கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை சுற்றறிக்கையாக,
அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி அவர்களின் ஒப்புதலைப்
பெற வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...