"ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை,
"ஆன்-லைன்' வாயிலாக திருத்த முடியாதவர்கள், தபால் மூலமாக அனுப்பி,
திருத்தம் செய்யலாம்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் பதிவு செய்தும் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், பொது இ-சேவை
மையங்களில், ஆதார் எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் அட்டை பெற்றுக்கொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாக
அச்சாகி இருப்பதாகவும், பெயர், வயது, மொபைல் எண் பிழையாக இருப்பதாகவும்
பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ஆதார் அட்டையில்
திருத்தம் செய்ய, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
https://uidai.gov.in/update-your-aadhaar.data.htmlஎன்ற இணையதள முகவரியை
பயன்படுத்தி, இப்பணியை மேற்கொள்ளலாம். அனைத்து வகையான திருத்தங்களுக்கும்,
மொபைல் எண் முக்கியம். "ஆன்-லைன்' மூலமாக பதிவு செய்ய, மொபைல் எண்ணுக்கு
வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, ஒருவரது ஆதார்
விவரங்களை திருத்த முடியும்.பெயர் திருத்தம் அல்லது முகவரி திருத்தம்
செய்ய, பாஸ்போர்ட், "பான்' கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை,
டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம். பிறந்த தேதியை
திருத்தம் செய்ய, பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், "குரூப்-ஏ'
நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை
சமர்ப்பிக்க வேண்டும்.
"ஆன்-லைன்' மூலம் திருத்தம் செய்ய, தங்களது ஆவண நகல்களை, இணையதளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், கம்ப்யூட்டர் மையங்களில் எளிதாக
இப்பணியை மேற்கொள்ளலாம். மொபைல் எண் தவறாக இருந்தால், எவ்வித திருத்தமும்
செய்ய இயலாது. தபால் மூலம் விண்ணப்பித்து சரி செய்யவும், வழிவகை
செய்யப்பட்டுள்ளது.ஆதார் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "மொபைல் எண்
தவறாக இருந்தால், எவ்வித திருத்தமும் நேரடியாக செய்ய முடியாது. மாறாக,
தகுந்த ஆதாரங்களுடன், அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த
படிவங்களை, UIDAI, Post Box No.99, Banjara Hills, Hyderabad - 500 034,
India என்ற முகவரிக்கு அனுப்பினால், விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு,
அதுகுறித்து, மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். கம்ப்யூட்டர்
மையங்களில் படிவம் பெற்று, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பூர்த்தி
செய்து அனுப்பலாம்,' என்றார்.
பழைய செய்தி
ReplyDelete