உறவினர்கள் இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே இறந்தவர்கள் பெயரை
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம், கடந்த மார்ச்சில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. திட்டப் பணிகளின்போது 16.5 லட்சம் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான மனுக்கள்பெறப்பட்டன. இவற்றில் தீர்வு காணப்பட்டது, காணப்படாதது தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளர் பட்டியல் அதிகாரிகள் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று அப்பகுதியில் இல்லாதவர்கள்,இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கின்றனர்.அதில், நீக்கம் செய்வதற்கு தகுதியானவற்றை மட்டும் நீக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிருடன் இருக்கும் வாக்காளர்கள் பெயர் இறந்தவர்கள் என கூறி நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறந்தவரின் பெயர், அவரது குடும்பத்தினரால் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் மட்டுமே நீக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...