பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்.,
மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம்
இன்னும் முடிவு செய்யவில்லை.
தமிழகம் முழுவதும், ஏழு அரசு; 14 அரசு உதவி
பெறும் கல்லுாரிகள் உட்பட, 690 பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன.
இவை, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.,
அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் உள்ளன.
இந்த ஆண்டு பி.எட்., மாணவர் சேர்க்கை ஆயத்த பணி இன்னும் துவங்காததால், மாணவர், பேராசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
● தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை
● கல்லுாரி கல்வி இயக்ககம்
● லேடி வெலிங்டன் கல்லுாரி
● உயர்கல்வி மன்றம்
● உயர்கல்விச் செயலகம் உள்ளிட்ட துறைகளின் அதிகார பிரச்னைகளால், சரியான முடிவு எடுக்க முடியவில்லை என, தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை மற்றும் உயர்கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:
பி.எட்., படிப்பை, இந்த ஆண்டு முதல், இரண்டு
ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என, என்.சி.டி.இ., தெரிவித்தது; அதன்படியே,
கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. வேறு வழியின்றி, இந்த
விதிமுறைகளை பின்பற்றத் தயார் என, தமிழக உயர்கல்வித் துறையும் முடிவு
செய்துள்ளது.
பாடத் திட்டம்
● இரண்டு
ஆண்டு படிப்புக்கு எதிராக, சுயநிதிக் கல்லுாரிகள், உயர் நீதிமன்றத்தில்
தொடர்ந்த வழக்கை முடிக்க, தமிழக அரசு மற்றும் பல்கலை நடவடிக்கை
எடுக்கவில்லை. அதனால், பாடத்திட்டத்தை வெளியிட முடியவில்லை.
● பல
ஆண்டுகளாக, பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி தான்
நடத்தி வந்தது. கடந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையை, கல்வியியல் பல்கலை
எடுத்துக் கொண்டது. பல்கலை துணை வேந்தர் விஸ்வநாதன், கடந்த, 22ம் தேதி
ஓய்வு பெற்றார். இதனால், மாணவர் சேர்க்கை மீண்டும் லேடி வெலிங்டன்
கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவும் தாமதமாகவே
எடுக்கப்பட்டுள்ளது.
● கல்லுாரிகளுக்கு
புதிய பாடத் திட்டம் அனுப்புவது; கவுன்சிலிங்குக்கான கல்லுாரி
காலியிடங்கள் பட்டியலை சேகரிப்பது; கவுன்சிலிங் ஊழியர் நியமனம்; கல்லுாரி
பட்டியல் தயாரிப்பது போன்ற பணிகளை துவங்குவதில், கல்லுாரி கல்வி இயக்ககம்
தாமதம் செய்து வருகிறது.
● புதிய கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என, கல்லுாரி கல்வி இயக்ககம் இன்னும் முடிவு செய்யவில்லை.
● உயர்கல்வித் துறை மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்குதல்; கவுன்சிலிங் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
● கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள, உயர்கல்வி மன்றம் அமைதியாக உள்ளது.
இந்த காரணங்களால், பி.எட்., கல்லுாரிகள் குழப்பத்தின் உச்சகட்டத்தில் உள்ளன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...