Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கு - "கடமை வீரர்" , "பாரத ரத்னா " காமராசர் வாழ்க்கை வரலாறு

கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் 

காமராஜரின் பிறந்த தினமான (15/03), "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தது, தமிழகத்தில் ஏழைகளும் கல்வி பயில காமராஜர் ஆற்றிய பணிக்கு  மிகச்சரியான புகழாரம்.

 
 
 
 
        "கர்ம வீரர்' என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை 1903 ஜூலை 15: இன்று விருதுநகராக  வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி  நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.

 1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.


 1919 : ரவுலட் சட்டத்தை எதிர்த்துகாந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.

 1920 : ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

 1922 : சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.

 1923 : நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில்கள்ளுக்கடை மறியலில்ஈடுபட்டார்.

 1925 : கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1927 : சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த  காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே  அகற்றியது)

 1928 : சைமன் குழுவை எதிர்த்து,மதுரையில் காமராஜர் போராட்டம். 

 1930 : வேதாரண்யத்தில் நடந்தஉப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1932 : போலீஸ் ஸ்டேஷன் மீதுவெடிகுண்டு வீசியதாக சதி வழக்கு, காமராஜர் மீது  சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.

 1933 : பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும்  கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும்  ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

 1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.

 1935 : டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

 1936 : காரைக்குடியில் நடந்தகாங்கிரஸ் கமிட்டித் தேர்தலில்சத்தியமூர்த்தி  தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 1937 : சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது  வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலரும்  வேண்டியும் மறுத்து விட்டார்.

 1940 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.

1941 : யுத்த நிதிக்கு பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால்,  பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருது

 நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1942 : ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில்  இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 

 1945 : இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்..

 1946 : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

 1947 ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.

 1954 : குலக்கல்வி திட்ட எதிர்ப்புகாரணமாக ராஜாஜி முதல்வர்பதவியை ராஜினாமா  செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார். 

 1954, ஏப்.13: காமராஜர் முதல்வரானார். 

 1956 : மொழிவாரி மாநில பிரிவினையின் படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு  தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார்.

 1957 : பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.

 1960 : ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.

 1962 : பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.

 1963 : எல்லோருக்கும் இலவசகல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமாசெய்தார்.

 1964 : அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1966 : இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.

 1967 : பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.

 1969 : நாகர்கோவில் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.

 1971 : பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமென்ட்உறுப்பினராக காமராஜர் தேர்வு.

 1975: அக்.2ம் தேதி எதிர்பாராமல் காமராஜருக்கு உடல் வியர்த்தது. டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.


 இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய  மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு  திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய  அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம்  வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை  சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த  முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார்.

பசிக்கும்  வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய  உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார்.

இதற்காக  கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது  எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை  பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் .

 தமிழகத்தில் கல்லாமையை  இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர்.

அவர் முதல்வராக  இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி  அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார்  என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர்.  இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என  அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற  வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .

கட்சியின்  மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற  வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில்  செயல்படுத்த விரும்பினார்.
 அது "கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது.

இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில்  முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும்  விதத்தில் "காமராஜர்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை  அளிக்கப்பட்டது.
இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்,  ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம்  ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர்.  ஆண்டு  வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச  கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது.

அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல்  மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும்  கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற  1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே  பள்ளிக்கு சென்றனர்.

ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம்  குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே  பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின்  எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.

இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல்  ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர்.  இது  காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது.

 1954ல் இருந்த 141 ஆசிரியர்  பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது.  கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில்  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே  இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன்  கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக  அமைந்தன.  ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும்  அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக  இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட,  நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு  பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

 இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல்  இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும்  திறக்கப்பட்டன.

காமராஜர்  மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும்,  காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப்  பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில்  கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி ,அண்ணா ,எம்ஜிஆர்  போன்றோர் தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது மரியாதையையும் அன்பும் செலுத்தினர்.

காமராஜர் ஆட்சி .அமைச்சர்களிடம் அவர் கூறும் போது, "பிரச்னைகளை எதிர்கொள்ளுங்கள்.  அதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்கு சிறிய  அளவிலேனும் தீர்வு காணுங்கள். நீங்கள் ஏதாவதுசெய்தால்தான் மக்கள்  திருப்திஅடைவார்கள்' என்பார்.

முதல்வர் என்பதற்காகவோ, கட்சித் தலைவர்  என்பதற்காகவோ அவர் சிறிதும், தனக்கென வசதி செய்து கொள்ளாத தியாக உள்ளம்  படைத்தவர்.


இந்தக் காலத்தில் சாதாரண திட்டத்தை செயல்படுத்திய தலைவர்கள் தங்கள் படத்தைகூட தம்பட்டம்  அடித்துக்கொள்கின்றனர்.
 முதல்வராக இருந்து அவர்  நிறைவேற்றிய முக்கிய திட்டங்கள்:அணைகள்

* தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

* மேட்டூர் அணையில் ரூபாய் 2.5 கோடியில் பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. 

* அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன.

* 2.5 கோடி ரூபாய் செலவில் வைகை அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.

* 2.5 கோடி ரூபாய் செலவில்சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர்

நிலங்கள் பயன்பெறுகிறது. 

* வாலையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6,500 ஏக்கர் நிலம்பயன் பெறுகிறது.

* மங்கலம் அணை 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 

* ஆரணி அணை, 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 1,100 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.


* காவிரி டெல்டா பகுதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டன.

* கிருஷ்ணகிரி அணை, 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 7,500 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.

* 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் 2 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறுகின்றன.

* புள்ளம்பாடி திட்டம் 1.5 கோடிரூபாயில் உருவாக்கப்பட்டது.இதனால் 22 ஆயிரம் ஏக்கர்நிலங்கள் பயனடைகின்றன.

* கோமுகி ஆற்றுத்திட்டம், 75 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதனால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெற்றன.

* பேச்சிப்பாறை, அழியாறு, பரம்பிக்குளம் மற்றும் குந்தா ஆகியஅணைகள்  காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.தொழிற்சாலைகள்அவரது ஆட்சிக்  காலத்தில் சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட்  கார்ப்பரேஷன், எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை  முக்கியமானவை.

சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி  நிறுவனங்கள், மாக்னசைட்,சுண்ணாப்பு சுரங்கங்கள், ரப்பர் தொழிற்சாலைகள்  ஆகியவற்றையும் காமராஜர் ஏற்படுத்தினார்.

நூல் நூற்பு, கார் உற்பத்தி, கார்  உதிரிபாகம், சைக்கிள், என்ஜின், மோட்டார் வாகனம், தட்டச்சு பொறிகள்,  சுவிட்சு கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவை சிகிச்சை  கருவிகள், தொடர்வண்டிப் பெட்டிகள், ராணுவவாகனங்கள் ஆகியவைதயாரிக்கும்  தொழிற்சாலைகளையும் காமராஜர் நிறுவினார்.

 1952 பொதுத்தேர்தலில் காமராஜர்,  ஸ்ரீவில்லிபுத்தூர் லோக்சபா தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்துப்  போட்டியிட்டவர்களுள் விஞ்ஞானி என்ற புகழ்பெற்ற ஜி.டி.நாயுடு.

 அதே  ஜி.டி.நாயுடு, காமராஜர் முதல்வரான பின், அவர் புரிந்த சாதனைகளை வியந்து,  காமராஜர் தான் என்றென்றும் தமிழக முதல்வராக இருக்க வேண்டும்என்றார்.

 காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா., "பச்சைத்  தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார். அவரது சாதனைகளை காங்கிரஸ்காரர்களைவிட  அதிகம் போற்றினார்.

 காமராஜர், ரஷ்யாவுக்கு செல்லும் போது  அணிய கோட் தைத்திருந்தார்.
ஆனால் நான் கதர் சட்டை கதர் வேட்டியுடன் தான்  சென்று வருவேன் எனக் கூறி சென்று வந்தார்.

" தியாக உணர்வுடன்,  தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல்,   மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. 

வங்கிக்  கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.  இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல்,   நாட்டின் மிக உயரிய  "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.

புனிதமான, எளிமையான  வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன்,  கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை  சூட்டி அவரை போற்றி வருகின்றனர்."




1 Comments:

  1. நேர்மையான காமராசரைப் போன்ற தலைவர்கள் தற்பொழுது இல்லையே என்ற ஏக்கம் வருகிறது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive