அண்பல் தெரிய அளவளாவும் அன்பரே !!!
அண்டம் அறிய உலாவரும் அக்னியே !!!
ஆண்டலைப்புள் போல் அகிலத்தைச் சுற்றிய
ஆசானே !!!
ஆண்டுதோறும் கொண்டாட ஐநா அறிவித்த மாணவரே
!!!
உண்ணாட்டம் உணர்த்திய உத்தியாவனமே !!!
ஊன் உண்ணா உத்தமரே !!!
ஊன்றுகோல் இல்லா ஊற்றுமரமே !!!
எண்ணியதெல்லாம் எண்ணியாங்கு முடிப்பவரே
!!!
எண்ணி எண்ணி எண்ணங்களை முடித்தவரே !!!
கண்ணியம் காக்க கடைமையாற்றிய காவலரே
!!!
கண்ணிமையாப் புருவம் கொண்ட கடவுளரே
!!!
தண்ணீர் சுற்றிப் பிறந்த தனையனே !!!
தண்மை பொருந்திய தானைத் தலைவனே !!!
நண்ணார் இல்லா நாயகமே !!!
நண்மையில் விளைந்த நல்லிணக்கமே !!!
பண்ணவனாக நிலைத்து நின்ற பாவலரே !!!
பண்பாளராக உழைத்து வென்ற பண்டிதரே !!!
புண்ணிய பூமியிலே பிறந்த புதல்வரே !!!
புண்ணியங்கள் ஆயிரம் செய்த புதல்வரே
!!!
மண்ணிலே பிறந்த மாசற்ற சிந்தையே !!!
விண்ணிலே மறைந்த ஏவுகணையின் தந்தையே
!!!
வண்கை நீண்ட வரதை வள்ளலே !!!
வண்டனார் கண்ட வாழும் வள்ளுவரே !!!
தட்சிணத்திலே தவழ்ந்த தமிழ் நதியே !!!
குடகத்திலே குனித்த குட்டுவனே !!!
வாடையிலே வரதரான வயவரே !!!
குணக்கிலே குணகிய குணதரனே !!!
நாற்றிசையில் நடந்த நடேசனே !!!
நற்றாய் பெற்ற நவநீதமே !!!
நீவிர் நடந்த திசைகள் நான்கு மட்டுமா???
இல்லை…. இல்லை….
நீவிர் கடந்த திசைகள் ஏராளம் !!!
நடந்து நடந்து களைத்த கால்கள்
இளைப்பாற இடம் மாறினவோ???
கால்கள் இடம் மாறியதால்
’கலாம்’ சென்றார்;
’காலம்’ சென்றார் என்றானதோ???
’கலாம்’ என்ற அக்னி ஏவுகணை
விண்ணில் பாய்ந்து விட்டதோ???
அது புவியை விட்டுத் தூர சென்றாலும்
அதன் சமிக்கைகள் புவியில்
பதியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன !!!
இந்தியா வல்லரசாகும் வரை
அது தன் சமிக்கைகளை அனுப்பிக் கொண்டே இருக்கும்
!!!
அன்று தான் அக்னிக்கு ஓய்வு !!!
அதுவரை,
இந்தியாவில் உள்ள,
இளைஞர்கள் ஒருவரோடு ஒருவர் நன்கு பழ’கலாம்’
மாணவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்’கலாம்’
மொழியை தெளிவாக உச்சரிக்’கலாம்’
விஞ்ஞானத்தை யோசிக்’கலாம்’
எளியவர்களைப் பார்க்’கலாம்’
குப்பைகளைப் பெருக்’கலாம்’
நதிகளை இணைக்’கலாம்’
நூல்களைப் படிக்’கலாம்’
அதன்பின் உறங்’கலாம்
”வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
”கலாம் தன்னை விண்வெளிக்கே
தந்து
உலகப்புகழ் கொண்ட இராம்நாடு”
”அற்றைத் திங்கள் அவ்வெண்
நிலவின்
எந்தையும் உடையேம்;
…………….. ………………..
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
…………………….. …………………
……………………… ……………………
…………………….. …………………
எந்தையும் இலமே” (புறம் - 112)
சொல்லொண்ணாத் துயரத்துடன்,
ப.சரவணன்
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,
போலம்பட்டி.
மருங்காபுரி ஒன்றியம்.
அக்னி சிறகுகளை இந்தியா முழுவதும் விதைத்த எங்கள் தேசத்தின் இரண்டாம் தந்தைக்கு எனது கண்ணீரோடு விடையளிக்கிறேன் .......
ReplyDeleteஅக்னி சிறகுகள் நம்மை விட்டு மறைந்ததாலும் அவருக்காக நாமும் சிறகை விாிக்க முயற்சித்து 2020-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் - ஜெய்ஹிந்த்
ReplyDeleteவாழ்க கலாம் புகழ் வெல்க அக்னி சிறகின் சாதனைகள்