பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது குறும்புத்தனமாக
மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், ஆசிரியர்களுக்குக் கோபம்
வந்துவிடும். உடனே பெஞ்சில் நிற்க வைத்தோ அல்லது முழங்கால் போட வைத்தோ
தண்டனை கொடுத்துவிடுவார்கள் இல்லையா? இதற்குப் பதிலாக விளையாட்டு
காட்டிக்கொண்டே ஆசிரியர்கள் பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்?
இதெல்லாம் நடக்குற காரியமா என்றுதானே நினைக்கிறீர்கள்.
மதுரை மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் இப்படி
விளையாடிக்கொண்டேதான் பாடங்களைப் படிக்கிறார்கள். விளையாட்டு
காட்டிக்கொண்டே பாடம் எடுக்கும் ஆசிரியரின் பெயர் ஆதலையூர் சூர்யகுமார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான்கு ஆண்டுகளாக 8,9,10-ம்
வகுப்புகளுக்குச் சமூக அறிவியல் பாடம் எடுக்கிறார் இவர். மாணவிகளுக்குப்
படிப்பில் ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையில் உருவானதுதான்
‘விளையாட்டுடன் கூடிய படிப்பு’. மாணவிகளுக்கு விளையாட்டோடு பாடங்களையும்
நடத்துவதற்காக 11 விளையாட்டுகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார் இவர்.
இப்படி விளையாட்டு காட்டிக்கொண்டே அதில் படிப்பையும் கலந்து சொல்வதால்
இவரது வகுப்புக்கு மாணவிகள் மத்தியில் தனி ஆர்வமும் மரியாதையும்
கிடைத்துள்ளது.
சரி, விளையாட்டு காட்டிக்கொண்டே எப்படி சூர்யகுமார் பாடம் நடத்துகிறார்? இதுபற்றி அவரிடமே கேட்போமா?
“டி.வி.யில கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்ப பசங்க வகுப்பறையில் அதைப்பத்தியே
பேசிக்கிட்டே இருப்பாங்க. மாணவிகளை அவர்கள் போக்கிலேயே கூட்டிச்சென்று
கிரிக்கெட் மாதிரியான விளையாட்டுகளைக் கொஞ்சம் நவீனமாக்கிப் படிக்க
வைத்தால் என்னவென்று தோன்றியது. அப்படித்தான் விளையாட்டுடன் கூடிய படிப்பை
ஆரம்பிச்சேன்.
பள்ளி தலைமையாசிரியரும் இப்படிப் பாடம் சொல்லித்தர அனுமதியளித்தார். இந்த
முறையில் பாடம் சொல்லித் தருவது மாணவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
அதனால் என்னோட ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பிச்ச இந்த விளையாட்டுடன் கூடிய
படிப்பை, பள்ளி முழுவதும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று
பெருமையுடன் கூறுகிறார் சூர்யகுமார்.
சரி, கிரிக்கெட் விளையாடிக்கொண்டே எப்படி இவர் பாடம் நடத்துகிறார் என்றுதானே நினைக்கிறீர்கள். அது எப்படி என்று அவரிடமே கேட்கலாமா?
“கிரிக்கெட் என்றால் இரண்டு அணிகள் வேண்டுமல்லவா? இதற்காக மாணவிகளை இரு
பிரிவாகப் பிரித்து விடுவேன். அவர்களுக்குப் பிடித்த பெயரில் அணியின் பெயரை
வைத்துக் கொள்ளலாம். இருபது ஓவர் கிரிக்கெட் போல மாணவர்களைப் படிக்க
வைப்பேன். எப்படி என்றால், ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் அல்லவா? ஒரு
மதிப்பெண் வீதம் பாடப் புத்தகத்தில் இருந்து ஆறு கேள்விகள் கேட்கப்படும்.
சரியாகப் பதில் சொன்னால், ஒரு ரன் (மார்க்).
தொடர்ந்து சரியாக நான்கு ரன் எடுத்தால், மேலும் ஒரு பவுண்டரி என நான்கு
மார்க் வழங்கப்படும், அதுவே தொடர்ந்து ஆறு பதிலைச் சொன்னால், கூடுதலாகச்
சிக்சர் கொடுக்கப்படும். இரண்டு அணிக்கும் இப்படி மாறி மாறி வாய்ப்புகள்
வழங்கப்படும்.
அதிகம் ரன் (மார்க்) எடுக்கும் அணி வெற்றி பெறும். இதனால் இரண்டு அணிகளாக
உள்ள மாணவிகளுக்குள் போட்டி மனப்பான்மை ஏற்படுகிறது. போட்டியில் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காகப் புத்தகத்தைப் போட்டி போட்டுக்கொண்டு
படிக்கிறார்கள்” என்று கிரிக்கெட் மூலம் பாடம் எடுக்கும் முறையை
விவரித்தார் சூர்யகுமார்.
இதேபோல இன்னொரு விளையாடும் உள்ளது. அதன் பெயர் ‘மேட்ச் த கேட்ச்'. இந்த
விளையாட்டில் வகுப்பில் பந்தை ஒரு மாணவியிடம் ஆசிரியர் வீசி ஒரு கேள்வியைக்
கேட்கிறார். மாணவி பந்தைச் சரியாகப் பிடித்து, கேள்விக்கும் சரியாகப்
பதில் சொன்னால் இரண்டு மார்க் தருகிறார். பந்தை நழுவ விட்டுப் பதிலை
மட்டும் சொன்னாலோ, பதில் தெரியாமல் பந்தை மட்டும் பிடித்தாலோ ஒரு மார்க்.
இப்படி அதிக மார்க் வாங்கும் மாணவி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.
இதுமட்டுமல்ல, டபுளா, டிரிபிலா?, சொல் அல்லது செல், பால் வீதிப் பயணம், படி
படி கபடி உள்பட 11 விதமான விளையாட்டுகள் மூலமாகப் பாடம் எடுக்கிறார்
சூர்யகுமார்.
இந்த முறையில் ஆசிரியர் சூர்யகுமார் பாடம் எடுப்பது மாணவிகள் மத்தியில்
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “விளையாடிக்கிட்டே படிக்க வைக்கிறது
எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. பாடத்தை அப்படியே மனப்பாடம்
செய்யாமல், அர்த்தம் புரிந்து படிக்கவும் வைத்துவிடுகிறார் ஆசிரியர்.
புத்தகத்திலிருந்து எந்த வரியைக் கேட்டாலும், அதை எங்களால் உடனே சொல்லிவிட
முடியும்” என்று கோரஸாகச் சொல்கிறார்கள் மாணவிகள்.
மாணவிகளுக்குக் கரும்பு தின்னக் கூலியா கொடுக்க வேண்டும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...