மாணவர்களிடம்,
போதை பழக்கம் மற்றும் வன்முறை கலாசாரம் பரவுவதை தடுக்க, தமிழக அரசு
பள்ளிகளில், இந்த ஆண்டு முதல் நல்லொழுக்க கல்வி துவக்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகள், பல துறைகளின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றில்,
விழுப்புரம், கரூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, திருச்சி, விருதுநகர்,
துாத்துக்குடி, திருநெல்வேலி உட்பட, சில மாவட்டங்களில், ஒரு சில
பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கே, மது அருந்தி விட்டு வருவது; மாணவியரை
கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகள், கடந்த கல்வி ஆண்டில்
கண்டுபிடிக்கப்பட்டன.பல பள்ளிகளில், ஆசிரியைகள் பணிக்கு
செல்லவே அச்சப்படும் அளவுக்கு, சில மாணவர்கள் முரட்டுத்தனமாகவும்,
ஒழுக்கமின்றியும் நடந்து கொள்வதாக புகார்கள் உள்ளன.இதுகுறித்து, கல்வித்
துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும்
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், நல்லொழுக்க பாடம் கற்றுத்
தந்து, மாணவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வியை
அறிமுகப்படுத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு என, சிறப்பு
பாடத்திட்டம் மற்றும் கையேட்டை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த கையேட்டின்படி, பெற்றோர்,
ஆசிரியர், உறவினர்கள், சக மாணவ, மாணவியர் ஆகியோரிடம், எப்படி மரியாதையுடன்,
நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என, மாணவர்களுக்கு கற்று
தரப்படும்.மது, புகையிலை பொருட்கள் மற்றும் செயற்கையான பலவித போதை
வஸ்துக்களால் ஏற்படும் பாதிப்புகள்; குடும்ப எதிர்காலம் மற்றும்
மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் நிலை, மாணவர்கள், மாணவியரிடமும்;
மாணவியர், மாணவர்களிடமும் நடந்து கொள்ளும் முறை குறித்து
பயிற்றுவிக்கப்படும்.
''நல்லொழுக்க கல்விக்கான பாடங்களை தயார் செய்து விட்டோம்; இதற்கு, தனியாக
சான்றிதழ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது; அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு, விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.
ராமேஸ்வர முருகன்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...