மத்திய, மாநில அரசு அலுவலக ஆதாரத்திற்கென "ஆதார் அட்டை' கட்டாயமாகிறது.
சிவகங்கையில் இப்பணி மந்தநிலையில் நடப்பதை, துரிதப்படுத்த பள்ளி, ரேஷன்
கடைகளில் "மொபைல் சென்டர்' அமைத்து "ஆதார் அட்டைக்கு' போட்டோ, கண்விழி
சேகரிக்கலாம் என கலெக்டர் மலர்விழி திட்டமிட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், வங்கி உட்பட அனைத்து இடங்களிலும் ஆதாரமாக "ஆதார் அட்டை' எண் கேட்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 13.75 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இதில், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைக்கான போட்டோ, கருவிழி, கண்புருவம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
60 சதவீதம்: கடந்த ஒரு ஆண்டாக ஓட்டுச்சாவடி, நகராட்சி, பேரூராட்சி, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதாருக்கு போட்டோ எடுத்து வருகின்றனர். இப்பணியை தனியார் நிறுவனம் முழுமையாக மேற்கொள்ளவில்லை.
போதிய இயந்திரங்கள் இன்றி, பற்றாக்குறை இயந்திரங்களை வைத்தே போட்டோ எடுத்து வந்தனர். இது வரை 8 லட்சம் பேருக்கு மட்டுமே, ஆதாருக்கான போட்டோ, கருவிழி, கண்புருவம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துள்ளனர். இதில், 4 லட்சம் பேருக்கு மட்டுமே ஆதார் அட்டை வந்துள்ளன. இன்னும் பெரும்பாலானவர்களுக்கு அட்டை வழங்கப்படவில்லை.
திட்டம்: இந்நிலையில், மத்திய, மாநில அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் செலுத்துதல், அரசு வழங்கும் கல்வி உதவி தொகை பெறுதல் போன்ற அனைத்து நலத்திட்டங்களை பெறவும், மாணவர்களிடம் கட்டாயம் ஆதார் எண் கேட்கின்றனர். இதற்காக, 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர் விடுமுறை நாட்களில், ஆதார் எடுக்கும் மையத்திற்கு அழைத்து செல்கின்றனர். அங்கு, கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், விடுமுறை நாட்களில் எடுக்க முடியாமல் திரும்பி வருகின்றனர். இதை தவிர்த்து மாவட்டத்தில் நூறு சதவீதம் பேருக்கும் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கும் நோக்கில், பள்ளி, ரேஷன் கடைகளில் "மொபைல் சென்டர்' அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
கலெக்டர் கூறும்போது: மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலும், பெரியவர்களுக்கு ரேஷன் கடைகளிலும் ஆதாருக்கு போட்டோ எடுக்க "மொபைல் சென்டர்' அமைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைத்தால், நூறு சதவீதம் ஆதார் அட்டை பணியை முடிக்கலாம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...